புலாவ் தெக்கோங்கில் நில மீட்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ள 200 ஹெக்டர் பரப்பளவில் எரிசக்தி உள்கட்டமைப்பு மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
செந்தோசா அல்லது தோ பாயோ நகரின் பரப்பளவில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு அளவைக்கொண்ட அந்த இடத்தில், ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள், குறைந்த கரிம ஆற்றல் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்படக்கூடும்.
அதற்கான முதன்மைத் திட்டத்தை உருவாக்க ஆலோசகரை நியமிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக எரிசக்தி சந்தை வாரியம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தது.
தேர்வு செய்யப்படும் ஆலோசகர் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நியமிக்கப்படுவார். ஆய்வு கிட்டத்தட்ட ஈராண்டுகள் தொடரும் என்று அது கூறியது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய நாள் பேரணி உரையில், சிங்கப்பூர் ஆயுதப் படையின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, புலாவ் தெக்கோங்கில் கிட்டத்தட்ட 500 ஹெக்டர் நிலம் எதிர்காலப் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஆற்றல் உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு அமையும்.
நாட்டின் பொருளியல், பகுதி மின்கடத்தி உற்பத்தி, தரவு மையங்கள் ஆகியவை விரிவடைவதால் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மின் தேவை ஆண்டிற்கு 2.4% முதல் 4.8% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் பாதியை ஹைட்ரஜன் பூர்த்தி செய்யக்கூடும் என்பதால், அதற்கான உள்கட்டமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
