சிங்கப்பூரின் புலாவ் தெக்கோங்கின் தெற்குப் பகுதியில் கூடுதல் நிலத்தை மீட்கத் திட்டம் உள்ளதாகப் பிரதமர் வோங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தெரிவித்துள்ளார்.
அங் மோ கியோவில் அமைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைமையகத்தில் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிய அவர், அதன்மூலம் சிங்கப்பூர் ஆயுதப் படைக்குக் கூடுதல் பயிற்சி இடங்கள் இருக்கும் என்று கூறினார்.
ஆயுதப் படையின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்ட பிறகும், கிட்டத்தட்ட 500 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் எஞ்சியிருக்கும்.
அந்த நிலம் தோ பாயோ வட்டாரத்தின் அளவுக்குக் கிட்டத்தட்ட சமம் என்றார் அவர்.
“இந்த நிலத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அது பற்றி இப்பொழுதே முடிவெடுக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை,” எனக் குறிப்பிட்ட திரு வோங், வருங்காலத்தில் பயன்படக்கூடிய இது போன்ற இடங்கள் இருப்பதே முக்கியம் என்றார்.
தெக்கோங் கெச்சில், தெக்கோங் புசார் என இரண்டு வெவ்வேறு தீவுகளாகப் புலாவ் தெக்கோங் முன்னர் பிரிக்கப்பட்டிருந்தது.
தெக்கோங் புசாரைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளும் தெக்கோங் கெச்சிலைச் சுற்றியுள்ள கடலின் சில பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளதால், தற்போது அவ்விரு தீவுகளும் இணைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
சிங்கப்பூரின் தீவுகளை மேம்படுத்தும் அதே நேரம், தலைநிலத்துடன் இத்தீவுகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
“புலாவ் தெக்கோங்கிற்கும் தலைநிலத்திற்கும் நிலவழித் தொடர்பு ஏதும் இல்லை,” என்பதைப் பிரதமர் சுட்டினார்.
முன்பு, ‘ஆர்பிஎல்’ படகுகளைப் பயன்படுத்தி தெக்கோங் தீவிற்கு தேசிய சேவையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பயணங்கள் நீண்ட நேரம் எடுக்கும். அதோடு, அந்தப் படகுகளில் அமர்வதற்கான வசதிகளும் குளிர்சாதனங்களும் இல்லை. இன்று, புதிய தொழில்நுட்பத்தால் மேலும் வேகமாகச் செல்லும் படகுகளை தேசிய சேவையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தெக்கோங்கிற்குப் படகுமூலம்தான் செல்லமுடியும் என்றார் திரு வோங்.
“பாலம் கட்டுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு. ஆனால், பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு மத்தியில் அது அமையும் என்பதால், கப்பல்கள் செல்ல அது இடையூறாக இருக்கும். ஆகவே, கடலுக்குமேல் பயணம் செய்ய முடியவில்லை என்றால், கடலுக்குக்கீழ் செல்ல முயல்வோம்,” என்று கூறினார் பிரதமர்.
ஆகவே, கடலுக்கு அடியில் சுரங்கப் பாதைகளைக் கட்டும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்வதாக அவர் தெரிவித்தார்.
நிலத்துக்கு அடியில் வாகனங்கள் செல்வதற்காகச் சுரங்கப் பாதைகளைக் கட்டியிருக்கும் அனுபவம் நமக்கு இருந்தாலும், இத்தகைய அளவில் கடலடிச் சுரங்கப் பாதைகளை நாம் கட்டியதில்லை என்றார் அவர்.
ஆனால், இந்த முயற்சி வெற்றிகண்டால், சற்றுத் தொலைவில் உள்ள தீவுகளையும் சிங்கப்பூரில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் அது மேலும் அருகே கொண்டுவரும் என்று அவர் தெரிவித்தார்.
“இதனால், பிற்காலத்தில் நமது தேசிய சேவையாளர்கள் எளிதில் தெக்கோங்கைச் சென்றடைய முடியும்,” என்று கூறினார் பிரதமர் வோங்.


