புலாவ் தெக்கோங் ராணுவப் பயிற்சி நிலையத்தில் தீச் சம்பவம்

2 mins read
022c8f14-0280-4b40-aca9-0ddcc2657d81
புலாவ் தெக்கோங்கில் உள்ள வீரர்களுக்கான படுக்கை அறை ஒன்றில் மூண்ட தீயைப் பயிற்சி நிலைய அதிகாரிகள் அணைத்தனர். - படம்: கெங்மன்டோ / டிக்டாக்

புலாவ் தெக்கோங்கில் உள்ள அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் (பிஎம்டிசி) உள்ள வீரர்களின் படுக்கை அறை ஒன்றில் தீ மூண்டது. வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல் வாக்கில் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவத்தனர்.

தீச்சம்பவம் பயன்படுத்தப்படாத கட்டடத்தில் ஏற்பட்டது என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். பிற்பகல் 1.15 மணியளவில் எச்சரிக்கை மணி ஒலித்ததையும் அவர் குறிப்பிட்டார்.

“தீக்கான எச்சரிக்கை ஒலியை கேட்டு புகை வந்த இடத்தை அடையாளம் கண்ட பயிற்சி நிலைய ஊழியர்கள் துரிதமாக தீயை அணைத்தனர்,” என்று தற்காப்பு அமைச்சு பேச்சாளர் சொன்னார்.

பயிற்சி நிலை ஊழியர்களோ பயிற்சி பெறும் வீரர்களோ எந்தக் காயமும் ஏற்படவில்லை.

டிக்டாக்கில் பரவிவரும் காணொளியில் படுக்கை அறை முழுவதும் சாம்பலில் மூடப்பட்டிருப்பதையும் ஆடவர் ஒருவர் தண்ணீர் குழாயைப் பயன்படுத்துவதையும் காண முடிகிறது. கவிழ்க்கப்பட்ட மெத்தைகள், மூடப்படாத நிலையில் இருந்த மின்சாரக் கம்பிகள், கறுத்துப்போன அறையின் கூறை ஆகியவற்றையும் காணொளி காட்டுகிறது.

சேதமடைந்த படுக்கை அறை வைப்பர் பிரிவைச் சேர்ந்ததாகக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்காப்பு அமைச்சு அதை உறுதிபடுத்தவில்லை.

தீக்கான காரணத்தைக் கண்டறிய சிங்கப்பூர் ஆயுத படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு உதவுவதாக அமைச்சு சொன்னது.

“சிங்கப்பூர் ஆயுதப்படை தேசிய சேவையாளர்களுக்கான இடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய தீப் பாதுகாப்புக்குரிய உயர் தரநிலைகளைக் கொண்டிருப்பதாக,” சிங்கப்பூர் ஆயுதப் படை சொன்னது.

விசாரணை தொடர்வதால் கூடுதல் விவரங்களை இப்போதைக்குத் தர இயலாது என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்