வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) கடும் போட்டி தரும் விதமாக பாட்டாளிக் கட்சி அதன் சில வலுவான புதிய வேட்பாளர்களை பொங்கோல், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் களமிறக்கியுள்ளது.
தனது வேட்பாளர்களை அக்கட்சி எங்கு களமிறக்கும் என மாதக்கணக்கில் ஊகம் நிலவி வந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமை (ஏப்ரல் 23) அனைத்துக்கும் பதில் கிடைத்தது.
மூத்த வழக்கறிஞர் ஹர்பிரீத் சிங்கும் மூன்று புதுமுகங்களும் பொங்கோல் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி அணியில் இடம்பெறுவது உறுதியானது. துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மசெக அணியுடன் அது பொருதுகிறது.
மற்றொரு நிலவரமாக, பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் ஃபைசல் மனாப், அல்ஜுனிட் குழுத்தொகுதியிலிருந்து தெம்பனிசுக்கு நகர்த்தப்பட்டுள்ளார். அக்குழுத்தொகுதியில் மசெகவையும் மற்ற இரு எதிர்க்கட்சிகளையும் எதிர்த்து பாட்டாளிக் கட்சி நான்கு முனைப் போட்டியுடன் களமிறங்குகிறது.
கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் பொங்கோல், தெம்பனிஸ் குழுத்தொகுதிகள் இரண்டிலும் பாட்டாளிக் கட்சி கவனம் செலுத்துவது தெளிவாகத் தெரிகிறது.
இதில் குறிப்பாக, பொங்கோல் குழுத்தொகுதியில் தனது செயல்பாடுகள் குறித்து அக்கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் யூஜின் டான் கருதுகிறார்.
“செங்காங் குழுத்தொகுதியில் தனக்குக் கிடைத்த முக்கிய வெற்றியை பொங்கோலிலும் மெய்ப்பிக்க அக்கட்சி முற்படுகிறது,” என்றார் அவர்.
2020 பொதுத் தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதியில் 52.12 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மசெகவை பாட்டாளிக் கட்சி தோற்கடித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இம்முறை பொங்கோல் குழுத்தொகுதியில் மசெக களமிறக்கியுள்ள அணியில் இடம்பெறும் மூவர் அரசு பதவி வகிப்பவர்கள்.
துணைப் பிரதமர் கான், மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் ஆகியோரே அவர்கள். செங்காங்கில் ஏற்பட்ட விளைவு பொங்கோலிலும் ஏற்படுவதைத் தவிர்க்கவே ஆளுங்கட்சி காய் நகர்த்தியுள்ளதாக பேராசிரியர் டான் கருத்துரைத்தார்.
பாட்டாளிக் கட்சியின் உத்தி
வேட்புமனுத் தாக்கல் தினம் நெருங்கிய வேளையில், பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம் அல்லது திரு ஜெரால்ட் கியாம் அல்ஜுனிட் குழுத்தொகுதியிலிருந்து வெளியேறி வேறு எங்கேயாவது போட்டியிடக்கூடும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறாக, அம்மூவரும் அல்ஜுனிட்டிலேயே போட்டியிட்டு அத்தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.