பொங்கோல் ஈஸ்ட் ஆற்றங்கரையோரம் 8,000 புதிய வீடுகள் வரக்கூடும்

பொங்கோல் ஈஸ்ட் ஆற்றங்கரையோரம் 8,000 புதிய வீடுகள் வரக்கூடும்

2 mins read
f1ad02f3-5c09-4603-843a-6797a8acaf3f
கோனித் தீவைப் பொங்கோல் ஈஸ்ட் நீர்முகப்புப் பகுதியுடன் பூங்கா இணைப்புப் பாதையொன்று இணைக்கிறது. - கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொங்கோல் ஈஸ்ட்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 25 ஹெக்டர் ஆற்றங்கரையோர நிலப்பரப்பில், குடியிருப்பு வட்டாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 8,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்ட முடியும். பல ஆண்டுகளாக அங்குப் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் ‘பெருந்திட்டம் 2025’ன் கீழ், அங்கு ஐந்து பெரிய குடியிருப்பு மனைகள் இருக்கின்றன. தெம்பனிஸ் விரைவுச்சாலையிலிருந்து தெபிங் லேன் வரையிலும் சுங்கை சிராங்கூன் பகுதியிலும் அவை அமைந்துள்ளன.

ஆற்றங்கரையோரம் உள்ள பூங்கா இணைப்புப் பாதை, செங்காங், ஹவ்காங் பகுதிகளை இணைக்கிறது. அத்துடன், பிரபலப் பொழுதுபோக்கு இடங்களான பொங்கோல் பூங்காவுக்கும் கோனித் தீவுக்கும் அது அழைத்துச் செல்கிறது.

அங்கு இயங்கும் குத்தகைதாரர்களிடம், 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிவடையும் அவர்களின் குத்தகைக் காலம் மேலும் புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நிறுவனங்களுக்குக் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிஸ்னஸ் டைம்ஸ் அறிகிறது.

எண்.50, பொங்கோல் ஈஸ்ட் ரோட்டில், ‘சிட்டி ஸ்ப்ரவுட்ஸ்’ நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க்கில் பிரபலமான உணவகக் குழுமத்தை நடத்தி வருகிறது. அதன் முதன்மைக் குத்தகை காலம் இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது; மேலும், எதிர்காலக் குடியிருப்பு மறுவளர்ச்சிக்கு இந்த இடம் தேவைப்படுவதால் குத்தகையை நீட்டிக்க முடியாது என்று சிங்கப்பூர் நில ஆணையத்தின் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“சிட்டி ஸ்ப்ரவுட்ஸ் நிறுவனம் 2026 டிசம்பர் 31க்குள் இடத்தைவிட்டு வெளியேறி, அதனை ஒப்படைக்கத் தயாராகி வருகிறது,” என்றும் அவர் சொன்னார்.

இதன் தொடர்பில், பிஸ்னஸ் டைம்ஸ் முன்வைத்த கேள்விகளுக்கும் ஆணையத்தின் பேச்சாளர் பதில் தந்தார்.

“எண்.32 பொங்கோல் ஈஸ்ட், எண்.6 தெபிங் லேன், எண்.10 தெபிங் லேன் ஆகிய இடங்களில் உள்ள அரசாங்கச் சொத்துகள் தற்போது முறையே ‘சிங் சீ சூன் ஃபுளோரல் & லேண்ட்ஸ்கேப்’, ‘ஸ்போர்ட்ஸ் ஹப் @ பொங்கோல்’, ‘ஏடி பொங்கோல்’ ஆகிய நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

“இந்த இடங்கள் மறுமேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதற்கான காலஅட்டவணை இறுதி செய்யப்படும் வரை அரசாங்கம் இந்தக் குத்தகைதாரர்களுக்குச் சில குத்தகைக்கால நீட்டிப்புகளை வழங்கியிருந்தது. தற்போதைய குத்தகைகள் 2026 டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைகின்றன, அதன் பிறகு இந்த இடங்களில் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் அந்தப் பேச்சாளர்.

மொகல்.எஸ்ஜி நிறுவனத்தின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மாக், இந்த ஐந்து மனைகளின் மொத்த நிலப்பரப்பு கிட்டத்தட்ட 2.6 மில்லியன் சதுர அடி அல்லது ஏறக்குறைய 25 ஹெக்டர் இருக்கும் என்று கணித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இடவிகிதங்களின்படி கட்டப்பட்டால், அதில் கிட்டத்தட்ட 8,400 தனியார் கூட்டுரிமை வீடுகள் அல்லது ஏறக்குறைய 7,000 பொதுக் குடியிருப்பு வீடுகளை உருவாக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பொங்கோல்வீடமைப்புவீடுகள்ஆறு