பொங்கோல் பேருந்துச் சந்திப்பு நிலையம் விரைவில் செயல்படும்: கான்

3 mins read
993fdb21-b59c-4c52-80de-ca9c96e7fa2b
யூசோஃப் இ‌‌‌ஷாக் பள்ளியில் நடைபெற்ற பொங்கோல் குழுத்தொகுதி பிரசாரக் கூட்டத்தில் துணைப் பிரதமர் கான் கிம் யோங், மூத்த அமைச்சர்  டியோ சீ ஹியன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

மக்கள் செயல் கட்சியின் பொங்கோல் குழுத்தொகுதி பிரசாரக் கூட்டம் ஏப்ரல் 26ஆம் தேதியன்று யூசோஃப் இ‌‌‌ஷாக் பள்ளியில் நடைபெற்றது.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையில் அத்தொகுதியில் போட்டியிடும் அணிக்கு ஆதரவு திரட்ட மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வேட்பாளர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோர் வருகையளித்தனர்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், பொங்கோல் வட்டாரத்தின் அழகியல், அங்குள்ள வசதிகள் குறித்துப் பேசினார். 31 பேருந்துகள் அவ்வட்டாரத்தில் செயல்படுவதாகக் கூறிய அவர், ஜூன் மாதம் புதிய பொங்கோல் பேருந்துச் சந்திப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

“மூன்றாம் காலாண்டில் கூடுதலாக இரு பெட்டிகள் கொண்ட இலகு ரயில்கள் செயல்பாட்டுக்கு வரும்,” என்றார். குறுக்கு ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்தபின் நெரிசல் குறையும் என்றும் சொன்னார்.

“உடற்பயிற்சிக்குக் கூடுதல் இடம் வேண்டுமெனப் பெண்கள் குறிப்பிட்டனர். ‘பொங்கோல் 21’ சமூக மன்றம் மேம்பாடடைந்து மின்னிலக்கப் பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறினார். இது சமூக ஒன்றுகூடலுக்கான இடமாக அமையும்,” என்றும் கூறினார்.

புதிய வரி விதிப்புகள் குறித்தும் பேசிய அவர், இது கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல,” என்றார். வேலை வாய்ப்புகளுக்காக அறிமுகம் கண்ட திட்டங்கள் குறித்தும் பேசினார்.

ஜுலை 2025ல் பொங்கோல் கோஸ்ட் உணவங்காடி நிலையம் தொடங்கப்படும் என்றார்.

வேட்பாளர்களை ஆதரித்து மலாய் மொழியில் பேசினார் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வேட்பாளர், உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான துணையமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம்.

அவர், “அடையாள அரசியலைப் புறக்கணிப்போம். சிங்கப்பூர்ப் பொதுத் தேர்தலில் வெளிநாட்டவர் தலையீட்டை நிராகரிப்போம்,” என்று அறைகூவல் விடுத்தார். அவை இரண்டும் பல்லின, பல சமய சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் இயோ வான் லிங், மூத்தோர் தொடங்கி, பெண்கள், விநியோக ஊழியர்கள், தனியார் டாக்சி ஓட்டுநர்கள் எனப் பலதரப்பட்ட குடியிருப்பாளர்கள் நலனில் தமது கவனம் உள்ளதாகக் கூறினார்.

“அரவணைப்பு, கனவுகள், விருப்பங்கள் நிறைந்த இடம் பொங்கோல்,” என்று சொன்ன திருவாட்டி இயோ, “பெற்றோரையும், குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பராமரித்து வரும் பெண்களுக்கு நீக்குபோக்கான அமைப்புடன் கூடிய வேலை வாய்ப்புகளை அளிக்க விழைகிறேன்,” என்றார்.

உணவு விநியோகப் பணி, தனியார் டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோர்க்கு நியாயமான ஊதியம், பணிக்காலக் காயங்களிலிருந்து பாதுகாப்பு, போதிய அளவு மத்திய சேமநிதிப் பங்களிப்பு ஆகியவற்றுக்காக உறுதியுடன் குரல் கொடுக்கப்போவதாகக் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் குறித்துப் பேசிய அவர், “இவை வேலையைத் தாண்டிக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்,” என்றார்.

“நீங்கள் என்னுடன் பகிர்வதைக் காது கொடுத்துக் கேட்பதுடன், அதற்குரிய முயற்சிகளையும் எடுப்பேன்,” என்றும் சொன்னார்.

மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய டாக்டர் ஜனில் புதுச்சேரி, பொங்கோல் வட்டார நூலகம், பூங்காக்கள், உணவுக் கடைகள் என வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள மேம்பாடுகள் குறித்துப் பேசினார்.

தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சரும் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளருமான டாக்டர் ஜனில், “சத்தம், நெரிசல், தூசி, தாமதம் எனச் சிரமங்கள் நிலவுகின்றன. இவைகுறித்து குடியிருப்பாளர்கள் தெரிவித்த கருத்துகளைக் கேட்டறிந்துள்ளோம். இவற்றையெல்லாம் சரி செய்யத் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வருமெனவும் 28 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் வருமென்றும் சொன்னார்.

பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசினார் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்.

பாலஸ்தீன காஸா சூழலைக் குறித்துப் பேசிய அவர், “அனைத்துத் தரப்பிலிருந்தும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளோம்,” என்றார்.

“போர் நிறுத்தம், பாதிக்கப்பட்டோர்க்கு உதவுவது ஆகியவற்றை விரும்புகிறோம். அவை சிங்கப்பூரர்களைப் பிரிக்க அனுமதிக்கக் கூடாது,” என்றும் சொன்னார். வெளிநாட்டுத் தலையீடுகளை அனுமதிக்கக் கூடாது,” என்ற அவர், “அது 60 ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த நல்லிணக்கத்தை அழித்துவிடும்,” என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்