பொங்கோல் எல்ஆர்டி: ரயில் நின்றுவிட்டதால் பயணிகள் வெளியேற்றம்

1 mins read
a1a998f0-603d-4a0f-8c18-954b70b556f2
சனிக்கிழமை (ஜனவரி 10) பொங்கோல் பாயின்ட் நிலையத்தில் ரயில் திடீரென நின்றுவிட்டது. - படம்: வின்சன்ட் லிம் ஃபேஸ்புக்

பொங்கோல் இலகு ரயில் சேவையில் (எல்ஆர்டி) மின்தடை ஏற்பட்டு சனிக்கிழமை (ஜனவரி 10) மதியம் பொங்கோல் பாயின்ட் நிலையத்தின் அருகே ரயில் நின்றுவிட்டது.

அதனால் ரயில் பணியாளர்கள் அவசரகாலத்தில் வெளியேறும் கதவு வழியாக ரயிலுக்குள் சென்று பயணிகளை வெளியேற்றினர். இணையத்தில் பதிவிடப்பட்ட காணொளியில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பணியாளர்கள் அந்த எல்ஆர்டி வண்டியில் நிற்பதும் அவசரகால வாயில்கள் திறந்திருப்பதும் தெரிகிறது.

பொங்கோல் பாயின்ட் நிலையத்தைவிட்டு புறப்பட்ட இலகு ரயில், மதியம் 2.30 மணியளவில் திடீரென நின்றுவிட்டதாக பயணி ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

பொது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. ஆனால், அது தெளிவாகக் கேட்காமல் மந்தமாக இருந்தது என்று அவர் கூறினார்.

ஏறத்தாழ 10 நிமிடங்களில் பணியாளர்கள் ரயிலின் முன்புறம் உள்ள அவசரகால நுழைவாயிலைத் திறந்து உள்ளே வந்தனர்.

அவர்கள் எல்ஆர்டியின் மற்ற கதவுகளைப் பின்னர் திறந்துவிட்டனர். ரயில் நிலையம் அருகிலேயே இலகு ரயில் நின்றுவிட்டது. ரயில் கதவுகள் திறந்தவுடன் தண்டவாளத்தில் இறங்கி நடக்கத் தேவையில்லாமல் நிலையத்தின் தளத்திலேயே பயணிகள் நடந்து சென்றனர்.

சனிக்கிழமை மதியம், பொங்கோல் வெஸ்ட் வட்டப்பாதையில் சென்றுகொண்டிருந்த இலகு ரயில் வண்டியில் 15 நிமிடங்களுக்குத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஊடகத்திடம் உறுதிசெய்தது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிறுவனம், சம்பவத்தை விசாரிப்பதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்