பொங்கோல் இலகு ரயில் (எல்ஆர்டி) சேவைகள் இன்று காலை (செப்டம்பர் 13) கிட்டத்தட்ட மூன்று மணி நேர சேவைத் தடங்கலுக்குப் பின்னர் காலை 8.10 மணிக்கு மீண்டன.
சேவைகள் முடங்கிய நேரத்தில் வழங்கப்பட்டு வந்த இலவச இணைப்புப் பேருந்து சேவை மீட்டுக்கொள்ளப்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் காலை 8.18 மணிக்கு தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தது.
ரயில் சேவைக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காலை நேர ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டதாக விடியற்காலை 5.14 மணிக்கு அந்தப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்து இருந்தது.
அதனைத் தொடர்ந்து, பொங்கோல் பேருந்து நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நிலையங்களின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு இலவச இணைப்புப் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதாக அது காலை 6.08 மணிக்கு வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட ரயில் சேவை தொடர்பான ஆக அண்மைய தகவல்களுக்கு தனது கைப்பேசிச் செயலி அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘மைடிரான்ஸ்போர்ட்’ (MyTransport) செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகளை அது கேட்டுக்கொண்டது.
ரயில் சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ பயணிகள் சேவைக் குழுவினர் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தில் பொங்கோல் எல்ஆர்டி சேவையில் ஏற்பட்ட மூன்றாவது சேவைத் தடங்கல் இது.