பொங்கோலின் ஓட்டுநரில்லா வாகனங்கள்: கட்டணச் சேவை அறிமுகம் ஒத்திவைப்பு

பொங்கோலின் ஓட்டுநரில்லா வாகனங்கள்: கட்டணச் சேவை அறிமுகம் ஒத்திவைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Jul 2026 - 9:46 pm

2 mins read

பொங்கோல் வட்டாரத்தில் ‘கிராப்’ நிறுவனத்தால் சோதனை முறையில் தற்போது இலவசமாக இயங்கிவரும் ஓட்டுநரில்லா இடைவழிப்பயணத்தைக் கட்டண முறைக்கு மாற்றும் திட்டம் இவ்வாண்டு இறுதிக் காலாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2026ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு வழிப்பயணத்துக்கு $4 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கிராப் அறிவித்திருந்தது.

உறுதி செய்யப்பட்ட பாதைகளில் பயணம் செய்வதைவிட கிராப் நிறுவனத்தின் வாகனங்கள் வரும் மாதங்களில் பயணிகள் தேவைக்கேற்ப செல்லவிரும்பும் இடங்களுக்குக் போகவைக்கும் சோதனைகள் நடத்தப்படும்.

நான்காம் காலாண்டுக்குள் அச்சேவை பொதுமக்களைச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று கிராப் தெரிவித்தது.

கிராப், கம்ஃபோர்ட் டெல்கிரோ ஆகிய நிறுவனங்கள் நடத்திவரும் ஓட்டுநரில்லா வாகனங்கள் (ஏவி) பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளபோதும் தற்போதைய நிலவரப்படி, அவை ‘குடியிருப்பாளர்களின் பலதரப்பட்ட பயணத் தேவைகளை முழுமையாகப்’ பூர்த்தி செய்ய முடியாது என்று நிலப்போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்தது.

ஜூலை 12ஆம் தேதிவரையில் அவ்வகை வாகனங்களை 11,500 பொங்கோல்வாசிகள் சோதித்துப் பார்த்துள்ளனர் எனவும் ஆணையம் தெரிவித்தது.

அவ்வாறு சோதித்த பொங்கோல் குடியிருப்பாளர்களின் கருத்துப்படி, நேரடியான பயணப் பாதைகளை அவர்கள் விரும்புகின்றனர். அது அதிக வசதியையும் நெகிழ்வுத் தன்மையையும் வழங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர் என்று ஆணையம் விளக்கியது.

மேலும் அவரவர் விரும்பும் இடங்களில் வாகனத்தில் ஏறவும் இறங்கவும் பொதுமக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஆணையம் தெரிவித்தது. இப்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயணிகள் ஏறி இறங்க முடியும்.

கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் வரை, தற்போது உள்ளதைப்போல இலவச இடைவழிப் பயணச் சேவை தொடரும் என கிராப் நிறுவனம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
வாகனம்நிலப் போக்குவரத்து ஆணையம்ஓட்டுநர்தானியங்கி கார்சோதனைபொங்கோல்