கேரோசெல், டிக்டாக், டெலிகிராம், மெட்டா போன்ற இணையத்தளங்களின் கணக்குகளைக் குற்றவாளிகளுக்கு வழங்குபவர்களுக்குப் புதிய மோசடி எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் இனி சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இத்தகைய கணக்குகளை உருவாக்குவதற்காகத் தங்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதும், குற்றச் செயல்களுக்காகக் கணக்குகளை விநியோகிப்பது அல்லது வாங்குவதும் குற்றம் என்று வகைப்படுத்தும் ‘மோசடிகள் (தடுப்பு நடவடிக்கைகள்), இதர விவகாரங்கள் மசோதா’ நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நிறைவேற்றப்பட்டது.
மோசடிகளுக்கு இணையக் கணக்குகளைத் தந்து உதவிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $10,000 வரையிலான அபராதத்துடன் 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
இத்தகைய புதிய அமலாக்க நடவடிக்கைகள் மோசடி ஒழிப்பு முயற்சிகளில் உதவுவதாக உள்துறை அமைச்சு கூறியது.
மேலும், புதிய சட்டத்தின்கீழ் நடத்தை விதிகள், அமலாக்க உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத இணையச் சேவை வழங்குநர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகை $1 மில்லியனிலிருந்து $10 மில்லியனாக அதிகரிக்கப்படும். இதுவே சிங்கப்பூர்ச் சட்டங்களின் தொகுப்பில் குறிப்பிடப்படும் அதிகபட்ச நிதித் தண்டனையாகும் என்று உள்துறை மூத்த துணையமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.
மேலும், தொடரும் குற்றங்களுக்கான அன்றாட அபராதம் $100,000லிருந்து $300,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மோசடிகளுக்கு எதிரான போராட்டம் அரசாங்கத்தின் தலையாய முன்னுரிமை என்று குறிப்பிட்ட திரு கோ, இணையத்தளங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்பத் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை வழங்குவது அவசியம் என்றார்.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், சிங்கப்பூரில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் $410.6 மில்லியனை இழந்தனர். காவல்துறையிடம் நாள்தோறும் சராசரியாக 90 மோசடிப் புகார்கள் அளிக்கப்படுவதாகவும் அவை $2 மில்லியன் இழப்பு தொடர்பானவை என்றும் திரு கோ தமது உரையில் குறிப்பிட்டார்.

