சிங்கப்பூரில் புகைமூட்டச் சூழல் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, ‘தி பர்பள் பரேட்’ அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அறிவித்தனர்.
சிறப்புத் தேவையுடையோர் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் அந்த நிகழ்வு அடுத்த சனிக்கிழமை (அக்டோபர் 24) சன்டெக் சிட்டியில் நடைபெறவிருந்தது.
அது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
“தற்போது நிலவும் கணிக்கமுடியாத, சுகாதாரமற்ற புகைமூட்டச் சூழலைக் கருத்தில் கொண்டு, ‘தி பர்பள் பரேட் 2026’ நிகழ்ச்சி 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எங்கள் நிகழ்வில் பங்கேற்பாளர்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே எங்களின் முக்கிய முன்னுரிமையாகும். புதிய தேதி உறுதி செய்யப்பட்டவுடன் அது பற்றி அறிவிக்கப்படும்,” என்றும் அந்தப் பதிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்காக வாங்கப்பட்ட கூப்பன்களை அடுத்த ஆண்டு பயன்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முதலாவது ‘பர்பள் பரேட்’ நிகழ்ச்சி 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த மாதம் நடைபெறவிருந்த நிகழ்வு அதன் 14வது பதிப்பாகும்.
