மாறிவரும் உலகளாவிய வர்த்தக சூழலுக்கு மத்தியில் வணிகங்கள் வளர்ச்சியடைய உதவும் வகையில் வர்த்தக ஆலோசனை நடுவம் ஒன்றை நிறுவ, பிடபிள்யூசி சிங்கப்பூர் அடுத்த மூன்று ஆண்டுகளில் $4 மில்லியன் முதலீடு செய்யும் என்று புதன்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற தொடக்க விழாவில் அறிவித்தது.
சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்த வர்த்தக ஆலோசனை நடுவம், உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் மாறிவரும் உலகளாவிய வர்த்தக இயக்கவியலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் தங்கள் செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் தாக்கங்களை மதிப்பிடவும் வட்டாரம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக சிறப்பான முடிவுகளை எடுக்கவும் ஆதரவளிக்கும் என்று பிடபிள்யூசி சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது நிபுணத்துவம் வாய்ந்த திறமைகளை உருவாக்கவும் புதுமையான கருவிகள் மற்றும் சொத்துகளை மேம்படுத்தவும் அத்துடன் வர்த்தகம் மற்றும் அனைத்துலக வளர்ச்சி தொடர்பான துறைகளில் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தப்படும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் அமைச்சின் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஹோ வெங் சி ஆகியோர் இணைந்து இந்த நடுவத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதிகரித்து வரும் வர்த்தக சிக்கல்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில், உறுதியான முடிவுகளை எடுப்பதில் உள்ள சிரமத்தைக் குறிப்பிட்ட பிடபிள்யூசி சிங்கப்பூரின் நிர்வாகத் தலைவர் மார்கஸ் லாம், “வணிகங்கள் அபாயங்களை நிர்வகிக்கவும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் அதிக நிச்சயத்தன்மையுடன் செயல்படவும் உதவும் ஒருங்கிணைந்த, நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இந்த மையம் சவால்களைச் சமாளிக்கும்,” என்று கூறினார்.

