தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யூனோஸ் குடியிருப்புப் பகுதியில் மலைப்பாம்பு

1 mins read
பூனையை விழுங்கியதால் வயிறு உப்பியது
a72e879f-e6c8-4bb3-8b7e-5cb6154472d0
குடியிருப்புப் பகுதியில் மலைப்பாம்பு கண்டறியப்பட்டது குறித்து இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தன. - படம்: சிங்கப்பூர் வைல்ட்லைஃப் சைட்டிங்ஸ்/ஃபேஸ்புக்

எண் 12 யூனோஸ் கிரசெண்ட்டில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) காலை உப்பிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது.

ஏறக்குறைய 2 மீட்டர் நீளமுடைய அந்த மலைப்பாம்பு, பூனை ஒன்றை விழுங்கியதாகவும் பின்னர் அப்பூனையை அப்பாம்பு கக்கிவிட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தேசிய பூங்காக் கழகம் உறுதிப்படுத்தியது.

பின்னர் தேசிய பூங்காக் கழகத்தால் மீட்ப்பட்ட அந்த மலைப்பாம்பு, கண்காணிப்புக்காக மண்டாய் வனவிலங்குக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மக்கள் இருக்கும் பகுதிகளிலிருந்து தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அது விடுவிக்கப்படும் என்றும் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படங்கள், புல்வெளிக்குப் பக்கத்தில் உள்ள திறந்தவெளி வடிகாலுக்கு உள்ளே அந்த மலைப்பாம்பின் ஒரு பகுதி காணப்பட்டது. அதன் வயிறு உப்பியிருந்தது தெரிந்தது.

அந்தப் படங்கள் குறித்து இணையவாசிகளிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தன. அந்தப் பாம்பின் அளவும் குடியிருப்புப் பகுதியில் அது கண்டறியப்பட்டது குறித்தும் சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். எலி, பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் மலைப்பாம்பின் பங்கு குறித்து வேறு சிலர் கருத்துரைத்தனர்.

யூனோசில் கண்டறியப்பட்ட மலைப்பாம்பு வகை சிங்கப்பூருக்குச் சொந்தமானது என தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மேலாண்மை குழும இயக்குநர் ஹாவ் சூன் பெங் கூறினார். எலிகள் போன்றவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அது முக்கியப் பங்காற்றுவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் பல்லுயிர்ச்சூழலாலும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே இயற்கையான வாழ்விடங்கள் அமைந்திருப்பதாலும், நகர்ப்புறப் பகுதிகளில் மலைப்பாம்புகள் கண்டறியப்படுவது அசாதாரணமானது அன்று என திரு ஹாவ் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்