உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதில் பயணம் செய்த பத்து பயணிகள் வேறொரு பேருந்துக்கு மாற்றப்பட்டனர்.
இரண்டு முறை போராடிய ஏக்கர்ஸ் வனவிலங்கு மீட்பு அமைப்பு அதிகாரிகள் ஒருவழியாகப் பேருந்திலிருந்து மலைப்பாம்பை அப்புறப்படுத்தினர்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) உட்லண்ட்ஸ் அவென்யூ 1இல் பேருந்து எண் 901M சென்றுகொண்டிருந்தபோது இரவு சுமார் 9 மணியளவில் மலைப்பாம்பு ஒன்றைப் பேருந்துக்குள் ஓட்டுநர் கண்டார்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தைச் சுற்றி சேவை வழங்கும் பேருந்து எண் 901M, டெக்கொங் பூங்கா, விஸ்டா பூங்கா ஆகியவற்றைக் கடந்துசெல்லும்.
மலைப்பாம்பு குறித்து தகவல் வந்ததை அடுத்து ஏக்கர்ஸ் அமைப்பு மீட்புக் குழுவை உதவிக்கு அனுப்பியது. பேருந்தைப் பலமுறை சோதித்தப் பிறகும் மலைப்பாம்பை அவர்களால் முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதையடுத்து புதன்கிழமை (அக்டோபர் 22) மலைப்பாம்பு காணப்பட்டதாக ஏக்கர்ஸ் அமைப்புக்கு இரண்டாவது முறை அழைப்புவிடுக்கப்பட்டது.
இந்த முறை இருக்கையின்கீழ் 40 சென்டிமீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு சுருண்டு கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.
அதிகாரிகள் மலைப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

