குவீன்ஸ்டவுன் எடிபிள் கார்டன் சிட்டி தோட்டம் ஜூனில் மூடப்படுகிறது

குவீன்ஸ்டவுன் எடிபிள் கார்டன் சிட்டி தோட்டம் ஜூனில் மூடப்படுகிறது

2 mins read
c71148d5-927c-4a5f-9fb7-b12cfaa77a51
எடிபிள் கார்டன் சிட்டியின் இணை நிறுவனர் ப்ஜோர்ன் லோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூகப் பண்ணையான எடிபிள் கார்டன் சிட்டி (இஜிசி) தமது பத்தாண்டு கால குவீன்ஸ்டவுன் இருப்பிடத்திலிருந்து ஜூன் மாதம் விலகுகிறது.

குத்தகைக் காலம் ஜூன் மாதத்தோடு முடிவடைவதால் அதன் பிறகு அந்த நிலப் பகுதியை மீண்டும் எடுத்துக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உணவு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நாட்டில், சமூக அக்கறை கொண்ட பண்ணைகளை நடத்துவதில் உள்ள சிரமங்களைக் காட்டும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜாலான் பெஞ்சாராவில் பத்து ஆண்டுகாலமாகச் செயல்பட்டு வரும் இஜிசியின் மொத்த பரப்பளவு 8,557 சதுர மீட்டர். கடந்த ஆண்டுகளில் மற்ற பண்ணைகளுடனும் அது நிலத்தைப் பகிர்ந்துகொண்டது. வாரந்தோறும் சுமார் 100 உணவகங்களுக்கும் 20 வீடுகளுக்கும் அது தனது விளைச்சலை விநியோகித்து வருகிறது.

ஏறக்குறைய 1.2 காற்பந்து திடலுக்கு சமமான அந்தத் தோட்டத்தில் விவசாயச் சுற்றுலா, பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் நகர்ப்புற விவசாய முன்னோடியான அது, 2023ஆம் ஆண்டிலிருந்து பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆண்டுதோறும் 10,000க்கும் மேற்பட்ட வருகையாளர்களை ஈர்த்துள்ளது.

இஜிசியின் குத்தகை 2025ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியானது. ஆனால் மாற்றத்திற்கு ஏதுவாக ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

இந்த இடத்தில் குடியிருப்பு வீடுகளைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மாற்று இடம் ஒன்று குத்தகைக்கு விடப்படுவதை இஜிசிக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.

இஜிசி ஒரு சமூக நிறுவனமாகும். கடைத்தொகுதிகளின் கூரை போன்ற பயன்படுத்தப்படாத இடங்களில் தீவு முழுவதும் 270 உணவுத் தோட்டங்களை அது நடத்தி வருகிறது.

அதன் இணை நிறுவனரான ப்ஜோர்ன் லோ, சிறிய வணிக இடத்திற்கான வாடகை மூன்று மடங்குக்கு மேல் இருக்கும் என்பதால் நிரந்தர இடம் இல்லாமல் சமாளிப்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.

குறிப்புச் சொற்கள்