குவீன்ஸ்டவுன் விளையாட்டு நிலையம் புதுப்பொலிவுடன் திறக்கப்படவுள்ளது

குவீன்ஸ்டவுன் விளையாட்டு நிலையம் புதுப்பொலிவுடன் திறக்கப்படவுள்ளது

2 mins read
64fc0cdc-e570-4c8d-b246-c85cd155005d
மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட இருக்கும் குவீன்ஸ்டவுன் விளையாட்டு மையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதுப்பிக்கப்பட்ட ஆக்டிவ்எஸ்ஜி குவீன்ஸ்டவுன் விளையாட்டு நிலையம் மூன்று ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு மே மாதம் மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்ட இந்த நிலையம், அண்மையில் ஜூன் 30ஆம் தேதி குறைந்த அளவிலான சேவைகளுடன் இயங்கத் தொடங்கிய நிலையில், தற்போது முழுமையாகத் திறக்கப்படவுள்ளது.

ஏறத்தாழ 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய இணைப்புக் கட்டடத்தில், உடற்பயிற்சிக் கூடமும் இரு நடவடிக்கை அறைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் முதியோர், உடற்குறையுள்ளோர், நடமாட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்ய உதவும் காற்றழுத்தத் தொழில்நுட்பம் கொண்ட சிறப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட நவீனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு யோகாசனம், கிக்பாக்சிங், ஸும்பா போன்ற பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. தேசிய அளவிலான விளையாட்டாளர்களின் பயிற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிலையத்தின் பிற வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

உலக ரக்பி அமைப்பின் அனைத்துலகத் தரநிலைகளுக்கு ஏற்ப 98 மீட்டர் நீளமும் 68 மீட்டர் அகலமும் கொண்ட செயற்கைப் புல்வெளி அமைக்கப்பட்டு, சிங்கப்பூர் ரக்பி சங்கம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தனது தலைமையகத்தைத் தோ பாயோவிலிருந்து இங்கு மாற்றவுள்ளது.

வீரர்களுக்கான சிறப்பு ஓய்வறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 4.5 மீட்டர் ஆழமுள்ள முக்குளிப்புக் குளம் உள்ளது. சிங்கப்பூர்த் திடல்தட வரலாற்றிலேயே முதன்முறையாக, மூன்று செயற்கை ஓடுதளங்கள், எத்திலீன் புரோப்பிலீன் டீன் மோனோமர் ரப்பர் கொண்ட இரண்டு தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நீச்சல் குள வளாகமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உடற்குறையுள்ளோர் நீச்சல் குளத்தைப் பயன்படுத்த உதவும் இயங்கு விசைச் சாதனம், சாய்வுத்தளங்கள் முதலியவற்றுடன் மின்தூக்கி வசதிகளும் உள்ளன. பொதுமக்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் விளையாட்டு வீரர்கள் சிறப்புப் பயிற்சிகளைப் பெறவும் ஏற்ற இடமாக நிலையம் விளங்கும் என ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பின் ஆக்டிவ்எஸ்ஜி தலைவர் டான் ஹோக் லியோங் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்