பாலியல் குற்ற வழக்குகளில் குறுக்கு விசாரணை செய்வது கவனத்துடனும், மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மானபங்க வழக்கு ஒன்றில் ஜனவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மேற்கண்டவாறு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெறுவதை பாதுகாக்கும் அதே வேளையில், புகார் அளித்தவர் தேவையில்லாமல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று திரு சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார். இந்த சமநிலையை அடைவது சிரமமான ஒன்று என்பதையும் அவர் சுட்டினார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுக்கு விசாரணை அனுபவம் தங்களுக்கு மீண்டும் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உணர்கின்றனர் என்றார் தலைமை நீதிபதி.
“பாலியல் குற்றங்களில் புகார் அளிப்போருக்கு தேவையில்லாமலும் உணர்ச்சிகளை மதிக்காத வகையிலும் குறுக்கு விசாரணையில் தொல்லைக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து கூடுமானவரை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களைத் தாக்கியவருக்கு எதிராக சாட்சியம் சொல்லும்போது அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது. அதைவிட அவர்கள் தாங்கள் அனுபவித்த ஆழ்ந்த அதிர்ச்சியை அவர்களுக்கு மீண்டும் தரக்கூடாது,” என்று தலைமை நீதிபதி விளக்கினார்.
மென்பொருள் பொறியாளர் மீதான மானபங்க வழக்கு தொடர்பான தீர்ப்பில் தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். அந்த வழக்கில் ஆடவர் தண்டிக்கப்பட்டு ஆறுமாதச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது. அந்த 42 வயது ஆடவரும் ஒரு 16 வயதுப் பெண்ணும் பேருந்தில் ஏறினர். அந்தப் பெண்ணுக்கு அருகில் அமர்ந்த அந்த ஆடவர் தேவையில்லாமல் அந்தப் பெண்ணைத் தொட்டார். பின்னர் அந்தப் பெண்ணின் தொடையையும் கால் முட்டியையும் வருடினார்.
பேருந்தைவிட்டு இறங்கிய பெண் தனது நெருங்கிய தோழியிடம் நடந்ததைத் தெரிவித்தார். பின்னர் தனது ஆசிரியருக்கும் அதுகுறித்து குறுந்தகவல் அனுப்பினார். மறுநாள் அந்த ஆசிரியரின் துணையுடன் காவல்துறையில் புகாரளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கின் தீர்ப்பு, தண்டனைக்கு எதிராக ஆடவர் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீட்டை நீதிபதி நிராகரித்து அதற்கான காரணங்களைத் தலைமை நீதிபதி தமது எழுத்துபூர்வமான தீர்ப்பில் விளக்கினார்.
இதில் பேருந்திலேயே சம்பவம் நடந்ததும் உடனடியாக அந்தப் பெண் ஏன் உதவி கோரவில்லை என்ற தொடர் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
ஆடவரின் கை தவறுதலாக பெண்ணைத் தொட்டதா அல்லது அவர் வேண்டுமென்றே கையைப் போட்டாரா என்பதே சர்ச்சையாக எழுப்பப்பட்டு இருந்த நிலையில் மேற்பட்ட கேள்விகள் தேவையில்லாதது. அத்துடன், அக்கேள்விகள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவோர் உடனடியாக புகாரளிப்பர் எனவும், பாதிக்கப்படுவோர் அனைவரும் ஒரே விதமாக நடவடிக்கை எடுப்பர் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் உள்ளது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

