சிங்கப்பூரின் முதலீட்டுப் பெருநிறுவனங்களான தெமாசெக், ஜிஐசி ஆகியவற்றின் வருவாய் பற்றி, வரும் திங்கட்கிழமை (ஜனவரி 12) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இந்த விவகாரத்தைப் பற்றி மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து குறைந்தது 10 கேள்விகள் முன்வைக்கப்படும்.
தெமாசெக், ஜிஐசி ஆகியவற்றின் முதலீடுகள் அரசாங்கம் எதிர்பார்த்தபடி வருவாய் ஈட்டித் தரவில்லையா என ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ கேள்வி எழுப்பினார்.
அத்துடன், கொந்தளிப்பு நிறைந்த முதலீட்டுச் சூழலில் அவ்விரு நிறுவனங்களும் அரசாங்கத்தின் வரவுச்செலவுத் திட்டத்திற்குத் தொடர்ச்சியாக பணம் கொடுக்க இயலுமா என செங்காங் குழுத்தாெகுதியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் வினவினார்.
இந்தத் தலைப்பின் தொடர்பில் வாய்மொழி பதிலுக்காகக் கேள்விகளைத் தாக்கல் செய்திருந்த ஏழு எம்பிக்களில் அவர்கள் இருவரும் அடங்குவர். அந்த இரண்டு நிறுவனங்களின் வருவாய் நிலை குறித்து ஃபைனான்ஷல் டைம்ஸ் இதழில் டிசம்பரில் வெளிவந்த செய்திக் கட்டுரை ஒன்று கேள்வி எழுப்பியது.
தெமாசெக், ஜிஐசி ஆகியவை தங்களையொத்த பெருநிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த வருவாயைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
பத்தாண்டு காலகட்டத்தில் இவை போன்ற கிட்டத்தட்ட 50 அனைத்துலக நிறுவனங்களில் இந்த இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களின் வருவாய் நிலை நன்றாக இல்லை என்று கூறப்பட்டது.

