தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேள்விகள் தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல: ஹர்பிரீத் சிங்

2 mins read
57bf4efa-c5d0-4ea6-a844-6b54a3194ad3
சிங்கப்பூரர்கள் தங்கள் தலைவர்களிடமிருந்து பொறுப்புணர்வை எதிர்பார்ப்பதாகப் பாட்டாளிக் கட்சியின் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் ஹர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம் கடினமான கேள்விகளைத் தனிப்பட்ட தாக்குதல்களாகக் கருதக்கூடாது என்று பாட்டாளிக் கட்சியின் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் ஹர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தில் வியாழக்கிழமை (மே 1) அன்று தம் அணியினருடன் தொகுதி உலா மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் திரு சிங் பேசினார்.

சிங்கப்பூரர்கள் தங்கள் தலைவர்களிடமிருந்து பொறுப்புணர்வை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், “ சிங்கப்பூரை நேசிக்கும் தலைவர்களாகப் பொறுப்பேற்கும்போது அனைத்து கடினமான கேள்விகளையும் செவிமடுக்கத் தயாராக இருக்கவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

சிங்கப்பூரர்கள் சார்பாக நாடாளுமன்றத்தில் வினாக்களைத் தொடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றார் திரு சிங்.

“கேள்விகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவை சில தலைவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தினாலும்கூட கேட்பது அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளாது என்ற அவர், “நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்,” என்றும் சொன்னார்.

தொடர்ந்து சில நாள்கள் பாட்டாளிக் கட்சி பொங்கோல் வட்டாரத்தில் தொகுதி உலா சென்ற நிலையில், துணைப் பிரதமர் கான் கிம் யோங்கையும் தாம் சந்தித்ததாகத் திரு சிங் தெரிவித்தார்.

“துணைப் பிரதமர் மிகவும் நல்லவர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் திரு சிங்.

அலெக்சிஸ் டாங்கின் தோற்றம் குறித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை

வாக்குச் சேகரிப்பில் பொங்கோல் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் அலெக்சிஸ் டாங் .
வாக்குச் சேகரிப்பில் பொங்கோல் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் அலெக்சிஸ் டாங் . - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் பொங்கோல் குழுத்தொகுதி வேட்பாளர் அலெக்சிஸ் டாங் தோற்றம் குறித்து மக்கள், குறிப்பாக ஆண்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஹர்பிரீத் சிங் வலியுறுத்தி இருக்கிறார்.

“நாம் பெண்களை மதிக்க வேண்டும். அவர்களைத் தனிமனிதர்களாகப் பார்க்க வேண்டும்,” என்றார் அவர்.

சக பெண் வேட்பாளர்களைப் பற்றி ஏதேனும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அதற்கு தகுந்தவாறு தாமும் தமது அணியின் மற்றொரு வேட்பாளரான ஜேக்சன் ஆவும் அவற்றை எதிர்கொள்வோம் என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே, ஒரு பெண் வேட்பாளராகத் தமக்கும் சமூகத்தில் சில எதிர்பார்ப்புகள் உண்டு என்றும் திருவாட்டி அலெக்சிஸ் டாங் கூறியுள்ளார்.

“நான் யார், நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது பற்றி அந்தக் கருத்துகள் என்னைக் கட்டுப்படுத்த விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்,” என்றார் திருவாட்டி டாங்.

குறிப்புச் சொற்கள்