தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொலைபேசிச் சேவைத் தடங்கல், எண்ணெய்க் கசிவு போன்றவற்றை நாடாளுமன்றம் விவாதிக்கும்

2 mins read
8e9adca3-942b-45d4-9657-f6bc11e8c5d5
சிங்கப்பூர் நாடாளுமன்றம். - படம்: எஸ்பிஎச் மீடியா

வரும் திங்கட்கிழமை (நவம்பர் 11) கூடவிருக்கும் நாடாளுமன்றம் சிங்டெல் தொலைபேசி சேவைத் தடங்கல், எண்ணெய்க் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்.

இது தொடர்பாக உறுப்பினர்கள் சமர்ப்பித்திருக்கும் கேள்வி விவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாயின.

அக்டோபர் 8ஆம் தேதி சிங்டெல் தொலைபேசி சேவையில் ஏற்பட்ட இடையூறுக்குக் காரணம் என்ன, வருங்காலத்தில் அதுபோன்ற தடங்கல்கள் ஏற்படாதிருக்க செய்யவேண்டியது என்ன, சிங்டெல்லுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளை உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

தொலைபேசிச் சேவைத் தடங்கல் காரணமாக அவசரச் சேவைகளுக்கும், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், வங்கிகள் மற்றும் வர்த்தகங்களுக்கும் இடையூறு ஏற்பட்டன. பல மணி நேரம் நீடித்த அந்தச் சேவைத் தடங்கல் ‘ஒரு தனிப்பட்ட சம்பவம்’ என்று சிங்டெல் கூறியிருந்தது.

தொலைபேசிச் சேவை பாதிக்கப்படும்போது அத்தியாவசிய நேரடி தொலைபேசி எண்களான 995 மற்றும் 999க்கு வரும் அழைப்பு விவரங்களைக் காக்கும் ஏற்பாடு உள்ளதா என்று ஜூரோங் குழுத்தொகுதி மசெக உறுப்பினரான டான் வு மெங் உள்துறை அமைச்சைக் கேட்டுள்ளார்.

அண்மையில் நிகழ்ந்த எண்ணெய்க் கசிவுச் சம்பவங்கள் குறித்தும் உறுப்பினர்கள் கேள்விகளைச் சமர்ப்பித்து உள்ளனர்.

கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் உலகளாவிய மையம் என்ற அடிப்படையில் எண்ணெய்க் கசிவு போன்ற சம்பவங்கள் தொடர்பான விழிப்பூட்டும் வழிமுறைகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளதா என்று ஈஸ்ட் கோஸ்ட் மசெக உறுப்பினர் செரில் சான் போக்குவரத்து அமைச்சை வினவியுள்ளார்.

தொலைமருத்துவ நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு தொடர்பான கேள்விகளும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

நோயாளிப் பராமரிப்பு தரநிலையை தொலைமருத்துவ சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்து கட்டிக் காப்பதை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள் நடப்பில் உள்ளதா என்றும் கூடுதல் ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவைப்படுமா என்றும் ஜாலான் புசார் தொகுதி மசெக உறுப்பினர் வான் ரைஸால் சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ளார்.

ஆக்ஸிலி ரோடு தளம் தேசிய நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுவதற்குரிய தகுதிநிலைகளை மதிப்பிடுவதற்கான தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆய்வு குறித்து மார்சிலிங்-இயூ டீ மசெக உறுப்பினர் ஹானி சோ கேட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்