உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியில் பயணிகள் தாங்களாகவே குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்ய உதவும் 10 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றால் ரயில் பயணிகள் குடிநுழைவு நடைமுறையை நிறைவு செய்யும் நேரம் பாதியாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரு ரயிலின் பயணிகள் அனைவரும் பதினைந்தே நிமிடங்களில் குடிநுழைவு நடைமுறையை நிறைவு செய்ய அந்த இயந்திரங்கள் வழிவகுக்கும்.
ரயில் சோதனைச் சாவடி அத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முதல் இடம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று கூறியது.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், இங்கிருந்து வெளியேறும் பயணிகள் என இருதரப்பினருமே அந்த இயந்திரங்களைப் பயன்படுத்த இயலும்.
அதிகாரி பணியில் ஈடுபட்டிருக்கும் குடிநுழைவு முகப்பில் ஒரு பயணி குடிநுழைவு நடைமுறைகளை நிறைவு செய்ய இப்போது 45 விநாடிகள் தேவைப்படுகிறது. புதிய இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது சராசரியாக 24 விநாடிகள் போதும் என்று ஆணையம் சொல்லிற்று.
குடிநுழைவு நடைமுறை விரைவாக நிறைவு பெறுவதால் அதிகாரிகள் சிலரை வேறு பணிகளில் ஈடுபடுத்த இயலும் என்பதை அது சுட்டியது.
அன்றாடம் அதிகபட்சமாக 31 ரயில் சேவைகள் மூலம் ஏறத்தாழ 10,000 பயணிகள் உட்லண்ட்ஸ் ரயில் சோதனைச் சாவடியைக் கடந்து செல்கின்றனர்.
மலேசியாவின் கேடிஎம் ரயில் நிறுவனம் ஜேபி சென்ட்ரலில் இருந்து உட்லண்ட்சுக்கு 18 சேவைகளையும் மாற்றுவழியில் 13 சேவைகளையும் வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய இயந்திரங்கள் மட்டுமன்றி தானியக்க குடிநுழைவுத் தடங்களையும் அதிகாரிகள் சேவை வழங்கும் முகப்புகளையும் பயன்படுத்த இயலும் என்று ஆணையம் கூறியது.
சிங்கப்பூர்வாசிகளும் நீண்டகால, குறுகியகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் புதிய நடைமுறையைப் பின்பற்றலாம்.


