மவுண்ட்பேட்டனில் ‘அமைதியான’ பிக்கல்பால் விளையாட்டு

2 mins read
e8523aee-cc60-44a2-9c0c-5a3e5b9532cd
நெகிழி (பிளாஸ்டிக்) பந்துகளைவிட ‘ஃபோம்’ எனப்படும் ஒருவகை மென்மையான நுரைகளில் தயாரிக்கப்படும் பந்துகள் சத்தத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்புப் பேட்டைகளில் இரைச்சலைக் குறைக்கும் முயற்சியாக ‘பிக்கல்பால்’ விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்துகள் மாற்றப்படுகின்றன.

வழக்கமாக நெகிழிப் (பிளாஸ்டிக்) பந்துகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும். அவற்றைவிட ‘ஃபோம்’ எனப்படும் ஒருவகை மென்மையான நுரைகளில் தயாரிக்கப்படும் பஞ்சுப் பந்துகள் சத்தத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே மவுண்ட்பேட்டனில் அவ்வகைப் பந்துகளைக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) அங்குள்ள குடியிருப்பாளர்கள் ‘பிக்கல்பால்’ விளையாட்டில் ஈடுபட்டனர். அதில் இளையோர் முதல் முதியோர் வரை குடியிருப்பாளர்கள் 120 பேர் பங்கேற்றனர். பந்துகள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

செய்தியாளர்களிடம் பேசிய மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸீ கீ, ‘பிக்கல்பால்’ விளையாட்டு அதிகமான இரைச்சலை எழுப்புவதாகக் குடியிருப்பாளர்கள் தம்மிடம் கவலை தெரிவித்திருந்ததாகக் கூறினார்.

டென்னிஸ், பூப்பந்து, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளின் கலவையாக அமைந்துள்ள ‘பிக்கல்பால்’, பூப்பந்துக்குப் பயன்படுத்தப்படும் தளத்தில் விளையாடப்படுகிறது. அதன் எளிமையான விதிமுறையும் அதனை விளையாடும் இடங்களும் எளிதாக அமைவதால் பலர் அதில் விரும்பிப் பங்கேற்கின்றனர்.

“அந்த விளையாட்டினால் பாதகமில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அதன் பிளாஸ்டிக் பந்துகள் மட்டையிலும் தரையிலும் படும்போது மிகவும் சத்தமான ‘பாப்’ என்ற ஒலி அடிக்கடி எழுகிறது. அச்சத்தம் குடியிருப்பாளர்கள் அவர்களது வழக்கமான அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதைத் தடுக்கிறது,” என்று திருவாட்டி கோ விளக்கினார்.

சமூக ஊடகங்களில் ‘பிக்கல்பால்’ குறித்து அவ்வப்போது புகார்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குடியிருப்பாளர்களுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படவும் அது காரணமாக அமைகிறது.

இரவுப் பணி முடிந்து பகலில் தூங்கும் பாதுகாவலரான தமது கணவருக்கு அந்தச் சத்தம் தொந்தரவாக இருப்பதாக ஒரு மாது கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் மன்றத்துக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் காரணம் காட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நகரின் பல விளையாட்டுத் தளங்களில் நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுஒலிவீவகமவுண்ட்பேட்டன்