மன இறுக்கம் உள்ளிட்ட நரம்பியல் தளர்வுகளும் குறைபாடுகளும் உள்ளோர் அமைதியோடு பயணம் செய்ய சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையத்தில் நான்கு தனியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விசாலமாக பலவண்ணங்களில் இயற்கை ஓவியங்களுடன் உள்ள அந்த அறைகள் மனதை அமைதிப்படுத்தக்கூடியவை. பரபரப்பான சூழலால் பாதிப்படையக்கூடிய பயணிகளை ஆறுதல்படுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயணிகளின் உதவியாளர்களும் அறைகளில் இளைப்பாறலாம்.
‘கால்ம் ரூம்’ என்ற பெயரில் இரண்டாம் முனையத்தில் விமானப் பயணிகள் புறப்பாடு, பயண இடைமாற்றப் பகுதிகளில் அந்த அறைகள் அமைந்துள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டின் அளவைவிட சற்று பெரியதாக 200 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறைகளின் வடிவமைப்பை ஆசிய மாதர் நல்வாழ்வுச் சங்கம், மெட்டா நல்வாழ்வு அமைப்பு போன்றவற்றுடன் சேர்ந்து சாங்கி விமான நிலையக் குழுமம் அமைத்துள்ளது.
“பலருக்கு விமான நிலையத்தின் சுற்றுச்சூழல் அளவுக்கு மீறிய அனுபவங்களை கொடுக்கலாம். இந்தத் தனியறைகள் உளவியல் ரீதியில் பயணிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் ஆறுதலும் அமைதியும் ஆதரவும் வழங்கி பயணத்தை எளிதாக்க உதவுகிறது,” என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செயல்பாட்டுச் சேவைகளுக்கான மூத்த துணைத் தலைவர் ஆங் சியு மின் கூறினார்.
கண்களுக்கு எட்டாத நரம்பியல் பிரச்சினைகள் உள்ளோரின் குடும்பத்தாருடன் நேர்காணல்களும் கருத்து சேகரிப்பு நிகழ்வுகளும் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் விவரித்தார்.
நிம்மதியை வழங்கும் நோக்குடன் அறைகளில் இயற்கை சார்ந்த பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வெளிச்சம், உணர்வுகளுடன் கற்பனையைத் தூண்டும் அம்சங்கள் என பலவகையிலும் நரம்பியல் தளர்வுள்ளோரின் நலனை முன்னிறுத்தி அறைகள் காட்சியளிக்கின்றன.