தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25,000 ரசிகர்களுக்‌கு இசை விருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான்

3 mins read
478eb53b-9074-4b0a-85e7-1acd46ed71e1
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி தேசிய விளையாட்டரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) களைகட்டியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் ஏறத்தாழ 25,000 ரசிகர்களின் பங்கேற்புடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) களைகட்டியது.

மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய ‘கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் ஆஃப் ஏ.ஆர்.ரகுமான்’ இசை நிகழ்ச்சி, வருகையாளர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும் ஒன்றாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

‘மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ்’, ‘அன்யூஷுவல் எண்டர்டெய்ன்மண்ட்’ நிறுவனங்கள் இணைந்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தியப் பாடகர்களும் புதிய பன்னாட்டு இளம் பாடகர்களும் இணைந்து பல்வேறு வயதினரையும் கவரும் வகையில் பழைய, புதிய தமிழ், இந்திப் பாடல்களைப் பாடி அசத்தினர்.

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் படைத்த இந்த நேரடி இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், மனோ, மோஹித் சௌஹான், சக்திஸ்ரீ கோபாலன், ரக்‌‌ஷிதா, சுபா, நிசா ஷெட்டி, ஏடிகே, பிளாஸே, ஸ்ரீ ராஸ்கோல் உள்ளிட்ட 31 கலைஞர்கள் மக்களை இசை மழையில் நனைத்தனர்.

இந்நிகழ்ச்சியைக்‌ காண சிங்கப்பூரர்கள் மட்டுமல்லாமல் மலேசியா, இந்தோனீசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் தம் கணவருடன் இந்நிகழ்ச்சியைக்‌ காண வந்திருந்தார்.

உள்ளூர் கலைஞர் ‌‌ஷபிர் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பின், இசைப்புயலின் பிரம்மாண்ட வருகை, அரங்கை அதிரவைத்தது. இன்னிசை இரவின் முதல் பாடலாக, தமக்கு இரு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ திரைப்படத்தின் ‘ஜெய் ஹோ’ பாடலுடன் ரகுமான் நிகழ்ச்சியைக்‌ கோலாகலமாகத் தொடங்கினார்.

பிரபல பாடல்களைக்‌ கலைஞர்கள் பாட, அரங்கமே அவர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இசைக்குழுவும் பக்கபலமாக இருந்து நிகழ்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.

மூன்று மணி நேரம் ஓய்வின்றி தொடர்ந்து பாடி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ரகுமானும் மற்ற கலைஞர்களும் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

சிங்கப்பூரின் பன்முக சமூகத்தை மனத்திற்கொண்டு, பாலிவுட் ரசிகர்களையும் மகிழ்விக்க பிரபல இந்திப் பாடல்கள் பலவற்றையும் இசை நிகழ்ச்சியில் ரகுமானும் அவரின் குழுவினரும் பாடினர்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக ‘ராப்’ அங்கமும் நடைபெற்றது. இதில் இடம்பெற்ற ‘பொன்மகள் வந்தாள்’, ‘காரா ஆட்டக்காரா’, ‘மகுடி’ முதலிய பாடல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

அதுமட்டுமல்லாமல், ரகுமான் தம் 21 வயது மகன் ஏ.ஆர்.அமீனை அறிமுகம் செய்துவைத்து இருவரும் சேர்ந்து ‘நினைவிருக்கா’ என்ற பாடலையும் பாடினர்.

உள்ளூர்க் கலைஞர் முகமது ரஃபியுடன் ரகுமான் இணைந்து 1998ல் வெளியிட்ட ‘ஜும்பலக்கா’ பாடலைப் பாடியபோது, அரங்கத்தில் இருந்தவர்கள் அவர்களுடன் இணைந்து பாடி ஆடினர்.

இரவு சுமார் 10.30 மணிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலுடன் இசை நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

அன்றைய நிகழ்ச்சி தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாகக் கூறினார் மிருதுள்ளா ரவி அனுராதா, 22.

“சிறு வயதில் என் வீட்டில் நான் கேட்டு மகிழ்ந்த பாடல்களை நேரடியாகக் கேட்டபோது, எனது பழைய நினைவுகள் மீண்டும் உயிர்ப்பித்தன. மேலும், மனோ, ஸ்ரீநிவாஸ் போன்ற புகழ்பெற்ற பாடகர்களுடன் சுபா போன்ற இளம் கலைஞர்கள் பாடியதும் உள்ளூர்க் கலைஞர் ஷபீர் உலகப் பிரபலம் ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடகராகப் பாடியதும் எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது,” என்றார் அவர்.

இசை நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது என்றாலும், தாம் அதிக எதிர்பார்ப்புடன் இருந்ததாகக் கூறினார் லெட்சுமி கார்த்திகேயன், 45.

மெல்லிசைப் பாடல்களைவிட உற்சாகமான பாடல்களை விரும்பும் இவர், இன்னும் பல உற்சாகமான பாடல்கள் இடம்பெற்றிருந்தால் நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சொன்னார். இருப்பினும், அனைத்து இசைக் கலைஞர்களின் திறமையையும் திருமதி லெட்சுமி பாராட்டினார்.

“இசை நிகழ்ச்சியின் தரமும் கலைஞர்களின் திறனும் அற்புதமாக இருந்தது என்றாலும், நிகழ்ச்சியில் நான் எதிர்பார்த்த பாடல்கள் இடம்பெறாமல் இருந்தது எனக்குச் சற்று ஏமாற்றம் அளித்தது,” என்றார் காயத்ரி கிருஷ்ணன், 26.

ரகுமானின் தமிழ், இந்திப் பாடல்கள் அனைத்தையும் தான் கேட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் அனைத்துமே அவரின் மிகச் சிறந்த பாடல்கள் என்று சொல்ல முடியாது எனத் தான் கருதுவதாகவும் அவர் சொன்னார்.

இருப்பினும், இசை நிகழ்ச்சியின் தயாரிப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் வருங்காலத்தில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் ரகுமான் தொடர்ந்து படைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்