‘ராகங்கள் 16’: நேரடி இசை நிகழ்ச்சி

2 mins read
c8392eac-3d6d-44aa-a20e-1a76dc53a15d
(நடுவில்) பிரபல இசைக் கலைஞர் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவோடு இணைந்து ரீ இன்கார்னேஷன் உள்ளூர் இசைக் குழு ‘ராகங்கள் 16’ நேரடி இசை நிகழ்ச்சியைப் படைக்கிறது. - படம்: ரீ இன்கார்னேஷன்
multi-img1 of 2

பிரபல இசைக் கலைஞர் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவோடு இணைந்து ரீ இன்கார்னேஷன் என்ற உள்ளூர் இசைக் குழு படைக்கும் ‘ராகங்கள் 16’ நேரடி இசை நிகழ்ச்சி சனிக்கிழமை செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

8 பாயிண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இப்பிரம்மாண்ட இசைக் கச்சேரி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் பிஜிபி மண்டபத்தில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கும்.

சிங்கப்பூர் மக்களுக்காக நிகழ்ச்சியைப் படைக்க இந்தியாவிலிருந்து வருகைபுரியும் வீணை வித்துவான் ராஜேஷ் வைத்யாவின் கர்நாடக சங்கீதம் இவ்விசைக் கச்சேரியின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.

16 ராகங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை இந்த 2 மணி நேர இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

உள்ளூரில் சில இசை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள ரீ இன்கார்னேஷன் உள்ளூர் இசைக் குழு ‘மேஷ் அப்’ (Mash Up) பாடல்களையும் படைக்கவுள்ளது.

கௌஷிக், தர்ஷனா, மீனாக்ஷி உட்பட பல பிரபல மீடியாகார்ப் பாடகர்களையும் உள்ளூர் இசைக் கலைஞர்களையும் உள்ளடக்கிய 12 நபர் கொண்ட ரீ இன்கார்னேஷன் குழுவோடு 13ஆவது கலைஞராக ராஜேஷ் வைத்யா இவ்விசைக் கச்சேரியைப் படைப்பார்.

“கர்நாடக இசை முதல் திரையிசைப் பாடல்கள் வரையிலான ஒரு பயணமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களுக்கு நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இது விளங்கும்,” என்றார் 8 பாயிண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் திரு அருமைச் சந்திரன்.

முற்றிலும் இசைக் கருவிகளோடு நடத்தப்படும் நேரடி கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிய அவர், சிறந்ததொரு இசைக் கச்சேரியை வழங்க கலைஞர்கள் பல மணி நேரம் பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி. இமானின் இசை நிகழ்ச்சி, இவ்வாண்டின் ‘இன்னிசைச் சாரல்’ தேவா இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளையும் 8 பாயிண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனமே ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் அட்ரின் மனோகர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

நுழைவுசீட்டுகளைப் பெற 18 வயதிற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்கள் எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகையைப் பயன்படுத்தலாம்.

மேல்விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் நுழைவுச்சீட்டுகளை வாங்கவும் ரசிகர்கள் https://sg.bookmyshow.com/en/events/raagangal-16/8POINTE4 என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்