சிங்கப்பூர் அனுபவிக்கும் இன, சமய நல்லிணக்கம் தானாக உருவாகவில்லை, அது உறுதியுடன் கூடிய கடின உழைப்பால், குறிப்பாக சமயத் தலைவர்களின் உழைப்பால் உருவானது என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
மே 4 விசாக தினக் கொண்டாடத்தில் பேசிய பிரதமர் வோங், பல இனங்களுக்கு இடையே உள்ள நல்லிணக்கத்தை அரவணைத்து பாதுகாப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக, உலகில் அதிகரித்துவரும் இன, சமய ரீதியான பதற்றங்களுக்கு இடையே அவ்வாறு செய்வது முக்கியம் என்றார் அவர்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் சிங்கப்பூர்ப் பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் வோங், இங்கு நாம் அனுபவிக்கும் நல்லிணக்கம் பொதுவாகக் காணப்படுவது அல்ல என்றார்.
“நாம் உலகத்தைப் பார்த்தால் பல்வேறு இடங்களில் சமய, இன பதற்றங்கள் அதிகரிக்கின்றன. அந்தப் போக்கு பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது,” என்றார் திரு வோங்.
பிரதமர் வோங், சிங்கப்பூர் சாலையில் ஓர் இந்து ஆலயம், ஒரு தேவாலயம், ஒரு பள்ளிவாசல் ஆகியவை ஒன்றின் பக்கத்தில் மற்றொன்று என கட்டப்படிருப்பதைக் காண முடியும் என்று சுட்டினார்.
“அனைத்து சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் ஒன்றாக வாழ முடியும், உண்ண முடியும், ஒருவர் மற்றவரின் விழாக்களைக் கொண்டாட முடியும். நமக்கு வெவ்வேறு நம்பிக்கைகளும் பழக்கங்களும் இருந்தாலும் உணவு வகைகளைப் பரிமாறிக்கொண்டு நட்பை வளர்த்து ஒரே பேட்டையில் ஒன்றாக வளர்வதில் நாம் மகிழ்கிறோம்,” என்றார் அவர்.
நிச்சயமாக அது தானாக வந்துவிடவில்லை என்ற திரு வோங், சிங்கப்பூர்ப் பெளத்த சம்மேளனத்தின் பங்களிப்பைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இன, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் சம்மேளனம், இன, சமய நல்லிணக்கத்தைப் பேணும் தேசிய குழுவில் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்ப் பெளத்த சம்மேளனமும் இதர பெளத்த அமைப்புகளும் காஸாவுக்குக் கடந்த ஆண்டு மனிதநேய உதவிகளைத் திரட்டும் இயக்கத்தில் பங்களித்ததையும் திரு வோங் பாராட்டினார்.
பெளத்த சமூகத்தின் பங்களிப்புக்காகவும் பிரதமர் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.