மாற்றத்தை ஏற்படுத்த அன்பே சிறந்த வழி

மாற்றத்தை ஏற்படுத்த அன்பே சிறந்த வழி

3 mins read
இன நல்லிணக்க நாளில் மாணவர்களிடம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ வலியுறுத்து
f4f5f879-ded5-4ab7-ae14-83269bc8e295
செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான நற்பண்பு, குடியியல் கல்விப் பாடத்தில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தையும் சமூக ஒற்றுமையையும் மாணவர்களிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 21ஆம் தேதி பள்ளிகளில் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கொண்டாட்டம் ‘நமது மக்கள், நமது கைவண்ணம்’ (Our People, Our Tapestry) என்ற கருப்பொருளில் அமைந்தது.

பல்வேறு சமூகங்களின் தனித்துவமான அடையாளங்கள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒன்றோடொன்று எவ்வாறு அழகாகப் பின்னப்பட்டுள்ளன என்பதை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

இதனையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற கொண்டாட்டங்களில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பங்கேற்றார்.

அவரை வரவேற்கும் விதமாக பள்ளி இசைக்குழுவினர், சிங்கப்பூர் இசையமைப்பாளர் லியோங் கிட் யெங் இயற்றிய ‘லிட்டில் ரெட் டாட்’ என்ற பாடலைப் பாடினர்.

அதன் பிறகு, தொடக்கநிலை 6 மாணவர்களுக்கான ‘நற்பண்பு, குடியியல் கல்வி’ பாட வகுப்பில் அமைச்சர் லீ கலந்துகொண்டார். அங்கு மாணவர்கள், இனங்கள் குறித்து நிலவும் பொதுவான கருத்துகள் (racial stereotypes) பற்றியும், ஒருவருக்கொருவர் கலாசாரங்களைப் புரிந்துகொள்வதற்குச் செயல்பட வேண்டிய விதம் பற்றியும் கலந்துரையாடினர்.

நற்பண்பு குடியியல் கல்வி வகுப்பில் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்கள்.
நற்பண்பு குடியியல் கல்வி வகுப்பில் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தக் கலந்துரையாடலின்போது, 'நான் இனவாதி இல்லை, ஆனால்…’ என்று தொடங்கும் வாக்கியங்களின் தொனி ஏன் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அமைச்சர் லீ சுட்டிக்காட்டினார். தமது இளம் வயது அனுபவங்களையும் மாணவர்களுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

இனங்கள் குறித்து நிலவும் பொதுவான கருத்துகள் எப்போதுமே கெட்ட நோக்கத்துடன் எழுவதில்லை என்றும், சில நேரங்களில் தவறான தகவல்கள், அறியாமையின் காரணமாகவும்கூட எழலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“புண்படுத்தும் வார்த்தைகளுக்கு அதேபோன்று பதிலடி கொடுக்கக் கூடாது. புண்படுத்தும் செயல்களுக்குப் பதிலாக அன்பைக் காட்ட வேண்டும். ஒருவரைத் தம் செயல்களைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டி, நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழி அதுவே,” என்று மாணவர்களிடம் திரு லீ கூறினார்.

சமூகத்தின் வலிமை, பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட காகிதச் சங்கிலிக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பாரம்பரிய விளையாட்டுகள், உணவுகள், இசைக் கருவிகள், கலாசாரப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பறைசாற்றும் தற்காலிகக் கூடங்களும் பல்வேறு நடவடிக்கைகளும் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களுடன் அமைச்சர் இந்நிகழ்வுகளில் பங்கேற்று கலந்துரையாடினார்.

இன நல்லிணக்க தினத்தன்று செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் பாரம்பரிய விளையாட்டில் ஈடுபடும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
இன நல்லிணக்க தினத்தன்று செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் பாரம்பரிய விளையாட்டில் ஈடுபடும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அத்துடன், தொடக்கநிலை 1 மாணவர்கள் சிங்கப்பூரின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கிய வண்ணமயமான ஓடுகள் கண்காட்சியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மற்ற இனத்தவருடன் பழகும்போது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் தொனியும் எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்கள் உணருவதே அன்றைய வகுப்பின் முக்கிய நோக்கம் என்று நற்பண்பு, குடியியல் கல்வித் துறைத் தலைவர் கொரினா சுவா குறிப்பிட்டார்.

குழு விவாதங்கள், பாத்திரமேற்று நடித்தல் போன்றவற்றின் மூலமாக மற்றவர்களின் கோணத்தில் சிந்திக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்ததாக அவர் சொன்னார்.

நற்பண்பு குடியியல் கல்வி பாடத்தில் செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கநிலை 6 மாணவர்கள் கலந்துரையாடினர்.
நற்பண்பு குடியியல் கல்வி பாடத்தில் செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கநிலை 6 மாணவர்கள் கலந்துரையாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“பன்முகக் கலாசார சமூகத்தில் வாழ்வதால், சிறு வயதிலிருந்தே மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்,” என அவர் கூறினார்.

நற்பண்பு, குடியியல் கல்விப் பாடத்தின்போது நடைபெற்ற விளையாட்டுகளின் வழியாக, 1964ஆம் ஆண்டில் இதே தினத்தன்று நடைபெற்ற சிங்கப்பூர் இனக்கலவரங்கள் குறித்துத் தெரிந்துகொண்டதாக தொடக்கநிலை 6 மாணவி சாஹித்யா கஜமுகன், 12, கூறினார்.

“இனங்கள் குறித்து நிலவும் பொதுவான கருத்துகள் மற்றவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை நான் இன்று கற்றுக்கொண்டேன்.

“சில நேரங்களில் விளையாட்டாகக் கூறும் வார்த்தைகள்கூட மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடும். அத்தகைய வார்த்தைகள் ஒருவரின் தன்னம்பிக்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடும்,” என்று சாஹித்யா கூறினார்.

தம் சீன நண்பர்கள் தமக்கு ‘சாப்ஸ்டிக்ஸ்’ பயன்படுத்தக் கற்றுக்கொடுத்ததையும் தீபாவளிப் பண்டிகையின்போது பலகாரங்களைப் பரிமாறிக்கொள்வதையும் அவர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

இன நல்லிணக்கம் என்பது ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் கொண்டாடும் நிகழ்வல்ல என்றும் நாம் ஒவ்வொரு நாளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்