சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாத்து, வலுப்படுத்தும் நோக்கிலான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நடப்பில் உள்ள இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தில் (MRHA) குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் அந்த மசோதா வரையப்பட்டது.
இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் விவரங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், சிங்கப்பூர் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறினார்.
இருப்பினும், அந்த நல்லிணக்கத்தைப் பராமரிக்கவும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், வலுவானதொரு சட்டக் கட்டமைப்பும் கொள்கைகளும் அவசியம் என்றார் அவர்.
“இந்த மசோதா அனைத்து விதமான இனப் பிரச்சினைகளுக்குமான தீர்வாகாது. வெவ்வேறு இனம் சார்ந்த மக்களை அவர்களுக்குள் கலந்து பழகும்படி சட்டத்தின் மூலம் வற்புறுத்த முடியாது,” என்றார் திரு சண்முகம்.
அன்றாடச் செயல்பாடுகளில் மற்றவர் உணர்வை மதிக்காத தன்மையோ இனவாதமோ வெளிப்படுவதைச் சட்டம் இயற்றுவதன் மூலம் தடுக்க இயலாது என்பதையும் அவர் சுட்டினார்.
“நாம் எவற்றைச் செய்யக்கூடாதது என்பதைத்தான் சட்டங்கள் வரையறுக்கும்,” என்றார் அமைச்சர்.
புதிய மசோதாவின் விவரங்களை அமைச்சர் சண்முகமும் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இனப் பாகுபாட்டுச் சம்பவங்களைக் கையாள்வதன் தொடர்பில் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் சமூக அடிப்படையிலான அணுகுமுறையை அறிமுகம் செய்யவும் உள்துறை அமைச்சருக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது.
தற்போதைய சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்துக்குப் பதிலாக, இன, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம் (Presidential Council for Racial and Religious Harmony) எனும் புதிய அமைப்பையும் அது உருவாக்கும்.
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து அமைச்சர்களுக்கோ நாடாளுமன்றத்துக்கோ இந்த மன்றம் அறிக்கை அளிக்கும். கட்டுப்பாட்டு உத்தரவுகள் தொடர்பில் அதிபருக்கு அது பரிந்துரைக்கும்.
இதன் அடிப்படையில் சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 78 பேர் அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏழு பேர் அதை எதிர்த்து வாக்களித்தனர்.
மேலும், சீன, மலாய், இந்திய சமூகத்தினருடன் இன, வர்த்தகப் பிணைப்புகளைக் கொண்டுள்ள சங்கங்களை ‘இன அடிப்படையிலான அமைப்புகள்’ என்று குறிப்பிடவும், அவற்றில் வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுக்கவும் இந்த மசோதா வகைசெய்யும்.
வர்த்தகச் சங்கங்களுக்கு இதன் தொடர்பில் கவலைகள் எழலாம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகத் திருவாட்டி சுன் ஷுவெலிங் கூறினார். இருப்பினும் இவ்வாறு குறிப்பிடப்படுவதால் அந்தச் சங்கங்கள் தவறு ஏதும் செய்ததாகக் கருதப்படமாட்டா என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பங்கேற்றனர்.
அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமும் அவர்களில் அடங்குவார். மசோதா தொடர்பான ஆலோசனை நடைமுறை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, நம்பிக்கை, மற்றவர் உணர்வைப் புரிந்துகொள்ளல், ஒற்றுமை ஆகிய அம்சங்களைக் கொண்ட சூழலைப் பேணுவதன் மூலம், இன வேறுபாடின்றி, சிங்கப்பூரர் என்பதில் அனைவரும் பெருமைகொள்ளக்கூடிய எதிர்காலத்தை உருவாக்க இயலும் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
பல்லின சமுதாயமான சிங்கப்பூரில் ஒருவரை மற்றவர் புரிந்துகொண்டு, மரியாதை செலுத்தும் வேளையில், தொடர்ந்து நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது முக்கியம் என்றார் அவர்.