சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சின்னஞ்சிறு கலாசார வேறுபாடுகளைப் பற்றிக் கிண்டலடிக்கும் காணொளிகள் பெரும்பாலும் ரசிக்கக்கூடியவையாக இருக்கும்.
ஆனால் இம்முறை, ‘த சிந்தியன் ஃபேமலி’ (@The Chindian Family) என்ற டிக்டாக் கணக்கில் டிசம்பர் 5ல் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சீன-இந்தியக் கலப்பின மகனும் மலேசியாவைச் சேர்ந்த சீனத் தாயாரும் பல்வேறு நாடுகளின் பெயர்களைத் தாங்கள் உச்சரிக்க முயல்வதைக் காட்டும் காணொளி, அந்த ‘டிக்டாக்’ கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நைஜீரியா நாட்டின் பெயரைத் தாயும் மகனுக்குத் தவறாக உச்சரித்ததாகவும் தவறான அந்த வார்த்தை கறுப்பினத்தவர்களை அவமதிக்கும் சொல்லாக இருப்பதாகவும் ‘ஸ்டாம்ப். எஸ்ஜி’ (stomp.sg) தளம், இது பற்றிய தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டது.
இந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில் இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். நோக்கம் எதுவாயினும் இத்தகைய சொற்களைப் பேசுவது, குறிப்பாக தாயும் மகனும் சேர்ந்து சொல்வது என்பது தவறு எனப் பலர் கண்டித்துள்ளனர்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் தம்மிடம் அதே வார்த்தையைக் கூறிய சிங்கப்பூரர்களைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் கன்யிஸா மியாக்கா, ‘டிக்டாக்’ காணொளி வழி தெரிவித்தார்.

