பிரித்தம் சிங் வழக்கு தொடர்பான பதிவு; சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை: ரஹாயு மஹ்ஸாம்

பிரித்தம் சிங் வழக்கு தொடர்பான பதிவு; சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை: ரஹாயு மஹ்ஸாம்

2 mins read
3314c7a7-f50e-4348-9b95-cb19df6ed6fc
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம். - படம்: பெரித்தா ஹரியான்

எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங், நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் பொய்யுரைத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹாங்காங் அறிவியல், தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக் கழக மூத்த விரிவுரையாளரான திரு டோனல்ட் லோ ஃபேஸ்புக்கில் தமது கருத்துகளைப் பதிவிட்டார்.

திரு லோவின் பதிவு தம்மீது அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் அக்டோபர் 18ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இதுகுறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

2021ஆம் ஆண்டில் சிறப்புரிமைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் இடம்பெற்ற குறுஞ்செய்தி ஒன்றைத் திருத்தியதற்கான காரணம் குறித்து முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லோ பெய் யிங் பொய்யுரைத்ததாக அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திரு சிங்கிற்கு எதிரான வழக்கில் சிறப்புரிமைக் குழு தவறு செய்துவிட்டதாக திரு லோ பதிவிட்டார்.

திருவாட்டி லோ உட்பட இரண்டு சாட்சிகளை சிறப்புரிமைக் குழு பெரிதும் நம்பியிருந்ததாகவும் அவர்கள் இருவரும் நம்ப முடியாதவர்கள் ஆகிவிட்டனர் என்றும் திரு லோ குறிப்பிட்டார்.

“சாட்சிகளில் ஒருவர் ஆதாரங்களை மாற்றியதாக ஒப்புக்கொண்டார். மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குத் தெரிந்தே இது நடந்தது,” என்று திரு லோ தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் என்று திரு லோ தெரிவித்தார்.

திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் சிறப்புரிமைக் குழுவில் அங்கம் வகித்தார்.

தமக்கு எதிராகத் திரு லோ மிகக் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளதாகக் கூறிய ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பிரித்தம் சிங்வழக்குநாடாளுமன்ற உறுப்பினர்