ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள பொழுதுபோக்கு நிலையங்களில் காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் ஒன்றிணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் 12 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர்.
அவர்கள் 19 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
பல்வேறு குற்றங்கள் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகுந்த வேலை அனுமதி சீட்டு இல்லாமல் பணிபுரிந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தகுந்த உரிமம், காப்புறுதித் திட்டம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, போதைப்பொருள் உட்கொண்டது, போதைப்பொருள் வைத்திருந்தது, ஆயுதங்கள் வைத்திருந்தது போன்ற குற்றங்களை அவர்கள் புரிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அதிரடிச் சோதனையை நேரில் பார்க்க ஊடகத்துறையினருக்கு அதிகாரிகள் வாய்ப்பளித்திருந்தனர்.
தமிழ் முரசும் அதில் கலந்துகொண்டது.
அதிரடிச் சோதனைக்கு பிடோக் காவல் பிரிவு தலைமை தாங்கியது.
தொடர்புடைய செய்திகள்
ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள கேடிவி நிலையத்தின் இரண்டாவது மாடிக்கு ஊடகத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இரு பெண்களும் தகுந்த வேலை அனுமதி சீட்டு இல்லாமல் அங்கு பணிபுரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் உட்கொண்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் அதே இடத்தில் கைது செய்யப்பட்டார்.
வேறொரு கேடிவி நிலையத்தில் இன்னொரு பெண் கைது செய்யப்பட்டார்.
அவரும் தகுந்த வேலை அனுமதி சீட்டு இல்லாமல் பணிபுரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஊடகத்துறையினரைப் பார்த்ததும் பொழுதுபோக்கு நிலையங்களில் இருந்த மற்றவர்கள் சினம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒழுங்காக நடந்துகொள்ளும்படி காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு நினைவூட்டினர்.
பொழுதுபோக்கு நிலையங்களுக்கான உரிம நிபந்தனைகளை இரு பொழுதுபோக்கு நிலையங்கள் மீறியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பொழுதுபோக்கு நிலையங்களின் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்.
அதிகபட்சம் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.