சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதிவரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனையில் மின்சிகரெட் குற்றங்கள் தொடர்பில் 26 பேர் பிடிபட்டனர்.
சுகாதார அறிவியல் ஆணையமும் காவல்துறையும் இணைந்து இந்த அமலாக்கச் சோதனைகளை நடத்தினர்.
மேலும் சோதனையில் 30க்கும் அதிகமான மின்சிகரெட் கருவிகளும் அதன் தொடர்பான பொருள்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்டவர்களின் வயது 17க்கும் 44க்கும் இடைப்பட்டவர்கள். அந்த 26 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோதனையின்போது 23 வயது ஆடவர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தீவு முழுவதும் அந்த ஒருவாரத்தில் மட்டும் எட்டு முறை அமலாக்கச் சோதனை நடந்தது.
மதுபானக்கூடம், கேளிக்கை நிலையம், காராவோக்கே நிலையங்கள் உள்ளிட்ட 69 இடங்களில் 500க்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த நடவடிக்கையில் 160 அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் காவல்துறை, மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட் புழக்கத்தைத் துடைத்தொழிக்க அரசாங்கம் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சிங்கப்பூரில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இரண்டாவது முறையாக மின்சிகரெட் புகைப்பது, விநியோகிப்பது, வைத்திருப்பது ஆகியவற்றின்கீழ் பிடிபட்டால் அவர்கள் கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.
மறுவாழ்வுத் திட்டத்தை முழுமையாக முடிக்கவில்லை என்றால் அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்படும்.
மூன்றாவது முறையாக மின்சிகரெட் தொடர்பாகச் சிக்கினால் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட், ‘சி’ பிரிவு போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் ‘எட்டோமிடேட்’ கடத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 15 பிரம்படிகளும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
முதல்முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் அவர்கள் ஆறு மாதங்கள் வரை கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.
இரண்டாவது முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், பின்பு கண்காணிக்கப்படுவார்கள், ஆறு மாதங்கள் கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும்.
மூன்றாவது முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் அவர்கள் 12 மாதங்கள் கண்காணிக்கப்படுவார்கள், 12 மாதங்கள் மறுவாழ்வு நிலையத்தில் இருக்கவேண்டும். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும்.

