கேலாங்கிலும் ஜூ சியாட்டிலும் உள்ள முடிதிருத்தகங்களையும் பொதுக் கேளிக்கை நிலையங்களையும் குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் 6 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூன் 27ஆம் தேதி கேலாங்கில் உள்ள மூன்று முடிதிருத்தகங்களில் காவல்துறை திடீர் சோதனை நடத்தினர்.
ஒரு கடையில், சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள், உரிமம் இல்லாத உடற்பிடிப்புச் சேவைகளை வழங்கிய பெண்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
சோதனையின்போது அந்த முடிதிருத்தகத்தில் நான்கு ஆண்கள் அத்தகைய சேவைகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இத்தகைய கடைகளில் ஊடகங்கள் கவனிக்க அனுமதிக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
காவல்துறையினர் பெண்களை விசாரித்தபோது, கடையின் பின்புறத்தில் உள்ள உடற்பிடிப்புப் படுக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டாலும், பணத்தைத் திரும்பப் பெறும் நம்பிக்கையில் ஆண்கள் அங்கேயே காத்திருந்தனர்.
அடையாளச் சரிபார்ப்பின் அடிப்படையில், பல பெண்கள் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்போல் தெரிந்தது.
இதுபோன்ற கடைகள் பெரும்பாலும் முன்புறத்தில் ஒரு சாதாரண முடிதிருத்த அமைப்பைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், பின்புறத்தில் மெல்லிய தடுப்புகளால் பிரிக்கப்பட்ட படுக்கைகளுடன் உடற்பிடிப்பு நிலையங்கள் உள்ளன.
சோதனையிடப்பட்ட முடிதிருத்தகத்தின் விவரங்கள்; மேலும் கைதுகள்
ஊடகங்கள் முன்னிலையில் காவல்துறை சோதனை நடத்திய கடையில் நான்கு உடற்பிடிப்புப் படுக்கைகள், ஆறு முடி கழுவும் படுக்கைகள், இரண்டு கால் பிடிப்பு சாய்வு நாற்காலிகள் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
அச்சமயம் குறைந்தது ஏழு பெண்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
மற்ற பொதுக் கேளிக்கை நிலையங்களில் அதிரடி நடவடிக்கைகள்
கேலாங், ஜூ சியாட் பகுதிகளில் உள்ள பொதுப் பொழுதுபோக்கு நிலையங்களிலும் காவல்துறையினர் ஜூன் 20, 27ஆம் தேதிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர். தூண்டிவிடுதல் (touting), பாலியல் தொழில் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சரியான வேலை அனுமதிச்சீட்டுகள் இல்லாமல் பணிபுரிந்த 32 முதல் 50 வயதுக்குட்பட்ட மொத்தம் 12 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 27ஆம் தேதி, கேலாங்கில் உள்ள ஒரு கேடிவி ஓய்வறைக்கும் ஊடகங்கள் அழைத்துச் செல்லப்பட்டன. அங்கு 10 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீன நாட்டவர்கள்.
காவல்துறை சோதனை நடந்துகொண்டிருந்தபோதும் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தைத் தொடர்ந்தனர்.
கேலாங்கில் உள்ள ஒரு கடையில், அவசரகால வெளியேறும் வழிகளுக்குத் தடைகள் போன்ற தீப்பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தனர்.
விரிவான அமலாக்க நடவடிக்கைகள்: குடிபோதையில் வாகனம் ஓட்டியோர் கைது
பரந்த அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய போக்குவரத்துக் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
24 முதல் 55 வயதுக்குட்பட்ட ஏழு வாகனவோட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 26 வயதுடைய ஒருவர், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை.