அண்மையில் ஐந்து நாள்களில் மூன்று முறை ரயில் சேவை தாமதமானதன் தொடர்பில் அத்தகைய சம்பவங்களுக்கான பதில் நடவடிக்கையை மேம்படுத்தவும் அவற்றுக்கான மூல காரணங்களைக் கண்டறியவும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்துடனும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றிவருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வடக்கு-தெற்குப் பாதை, வடகிழக்குப் பாதை, வட்ட ரயில் பாதை ஆகியவற்றில் அண்மையில் அவ்வாறு சேவை தாமதமானது.
பிப்ரவரி 7, 10, 11ஆம் தேதிகளில் காலை உச்சநேரத்தின்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அந்தச் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று ஆணையம் பிப்ரவரி 13ஆம் தேதி தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணை முடிவுகளை வெளியிட்ட ஆணையம், இச்சம்பவங்களைத் தீவிரமாகக் கருதுவதாகக் கூறியது.
பிப்ரவரி 7ஆம் தேதி நடந்த சம்பவத்தின் மூல காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் முழுமையான விசாரணையை நடத்துவதாகக் கூறப்பட்டது.
மேலும், வடகிழக்குப் பாதையில் பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த சம்பவத்துக்குச் செயலிழந்த மின்னணு அட்டையால் சமிக்ஞைக் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஆணையம் கூறியது.
இறுதியாக, பிப்ரவரி 11ஆம் தேதி வட்ட ரயில் பாதையில் சேவை தாமதமான சம்பவத்துக்கு மின்சாரம் தடைபட்டது காரணம் என்று ஆணையம் கூறியது.

