இரண்டாவது மாதமாகச் சரிந்த ரயில் சேவை நம்பகத்தன்மை

2 mins read
வடக்கு-தெற்கு ரயில் பாதை நம்பகத்தன்மை குறியீட்டில் ஆக மோசமாக வந்தது
07c76fed-081e-4fe7-bb92-f2422d672dd1
முந்தைய மாதத்துடன் ஒப்புநோக்க எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகிக்கும் வடக்கு-தெற்கு ரயில் பாதையே ஆக மோசமான ரயில் பாதை என நிலப் போக்குவரத்து ஆணைய அறிக்கை குறிப்பிட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்புமீதான நம்பகத்தன்மை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வீழ்ச்சி கண்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதம் சரிந்த நம்பகத்தன்மை செப்டம்பர் மாதம் மேலும் சரிந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் வரை ரயில்கள் கிட்டத்தட்ட 1.67 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன.

ஒப்புநோக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரயில்கள் 1.74 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்தன.

செப்டம்பர் மாதத்தில் இரண்டு பெரிய ரயில் சேவைத் தடைகள் ஏற்பட்டன. செப்டம்பர் முதலாம் தேதி வட்ட ரயில் பாதையிலும் செப்டம்பர் 16ஆம் தேதி கிழக்கு-மேற்கு ரயில் பாதையிலும் ஏற்பட்ட சேவைத் தடங்கல்கள் ஏறக்குறைய அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தன.

செப்டம்பர் 13ஆம் தேதி பொங்கோல் இலகு ரயில் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்று மணி நேர சேவைத் தடை ஏற்பட்டது.

முந்தைய மாதத்துடன் ஒப்புநோக்க எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகிக்கும் வடக்கு-தெற்கு ரயில் பாதையே ஆக மோசமான ரயில் பாதையாக நிலப் போக்குவரத்து ஆணைய அறிக்கை குறிப்பிட்டது.

செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சேவைத் தடங்கலின்போது ரயில்கள் ஏறக்குறைய 1.65 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்தன. ஒப்புநோக்க, ஆகஸ்ட் மாதம் அது 1.65 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.

ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்புகளில் ஆகக் குறைவான நம்பகத்தன்மையுடைய ரயில் பாதையாக வடக்கு-தெற்கு ரயில் பாதை வகைப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 2ஆம் தேதி வடக்கு-தெற்கு ரயில் பாதையில் உட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து ஈசூன் நிலையம் வரை சேவைத் தடங்கல் ஏற்பட்டது. இரவு 8.05 மணியிலிருந்து இரவு 8.50 மணி வரை பயணங்கள் தாமதமாகின.

செப்டம்பர் 14ஆம் தேதி நியூட்டன் நிலையத்திலிருந்து அங் மோ கியோ நிலையம் வரை பிற்பகல் வாக்கில் மற்றொரு சேவைத் தடங்கல் ஏற்பட்டது.

காலை 11.44 மணியிலிருந்து பிற்பகல் 12.21 மணி வரை நிலையங்களுக்கு இடையே பயணிகள் கூடுதல் பயண நேரத்தைச் சேர்த்துக்கொள்ளவேண்டி இருந்தது.

இரண்டு தருணங்களிலும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் 30 நிமிடங்களுக்குள் சேவையை ஓரளவு மட்டுமே செயல்படுத்த முடிந்தது.

ஐந்து ரயில் பாதைகளில் டௌன்டவுன் பாதை ஆகச் சிறந்த, நம்பகத்தன்மை நிறைந்த பாதையாக நீடிக்கிறது.

செப்டம்பர் மாதம் தாமதங்களுக்கு இடையே டௌன்டவுன் பாதையில் ரயில்கள் கிட்டத்தட்ட 2.77 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்தன. ஆகஸ்ட் மாதம் அது 2.76 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.

குறிப்புச் சொற்கள்