கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவைத் தடை மேலும் சில நாள்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி ரயில் சேவையை முற்றிலுமாக வழக்க நிலைக்குக் கொண்டுவர எஸ்எம்ஆர்டி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 27ஆம் தேதி சேவையின் ஒரு பகுதி வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்திருந்தன.
பாதிக்கப்பட்ட நான்கு ரயில் நிலையங்களுக்கு இடையே, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, குறுந்தொலைவு ரயில்கள் (Shuttle trains) இயக்கப்படும் என்று செப்டம்பர் 26ஆம் தேதி கூறப்பட்டிருந்தது.
அன்று பின்னேரம், ஒரு தடத்தில் மட்டும் பழுதுபார்ப்புப் பணிகளை விரைவுபடுத்த, ஆன அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அத்திட்டம் தள்ளிப்போடப்பட்டதாகவும் நிறுவனமும் ஆணையமும் தெரிவித்தன.
குறுந்தொலைவு ரயில் இயக்கப்படும்போது பழுதுபார்ப்புப் பணிகள் பாதிக்கப்படும் என்பதை அவை சுட்டின.
எனவே, கூடிய விரைவில் ரயில் சேவையை முழுவதுமாக வழக்கநிலைக்கு மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை தர முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
குறுந்தொலைவு ரயில்கள் இயக்கப்பட்டால், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரயில் சேவை முழுவதுமாக வழக்கநிலைக்குத் திரும்புவது சாத்தியமாகாது என்று ஆணையமும் நிறுவனமும் கூறின.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி நிறுவனம் இரண்டையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இரவுபகலாகப் பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபடுவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
அவர்கள் சேதமுற்ற ரயில் தடங்களையும் கருவிகளையும் சோதித்து வருவதாக செப்டம்பர் 26ஆம் தேதி பின்னேரம் அவர் கூறினார்.
“விரிவான சேதம் என்பதால் அவர்கள் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது,” என்றார் அமைச்சர்.
உலு பாண்டான் பணிமனைக்குச் சென்றிருந்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பயணிகளின் புரிதலுக்கும் பொறுமைக்கும் ரயில் ஊழியர்கள்மேல் அவர்கள் காட்டும் அக்கறைக்கும் அமைச்சர் நன்றி கூறினார்.
முன்னதாக, செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்ட காணொளியில் திரு சீ, பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கூடிய விரைவில், பாதுகாப்பாக, ரயில் சேவையை வழக்கநிலைக்குக் கொண்டுவர, ஊழியர்கள் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.