ரயில் சேவை சீராக்கம்: வெளிநாட்டு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், தொண்டூழியர்களின் கூட்டுமுயற்சி

ரயில் சேவை சீராக்கம்: வெளிநாட்டு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், தொண்டூழியர்களின் கூட்டுமுயற்சி

2 mins read
8938a94b-4fe6-4dca-a813-40b2bf296754
(இடமிருந்து) பத்திரி வேலை செய்யும் சத்னம் சிங், கட்டுமான மேலாளர் தண்டபாணி விக்னேஷ், பத்திரி வேலை மேற்பார்வையாளர் சாமு கலையரசன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு - மேற்கு ரயில்பாதையில் ஏற்பட்ட இடையூறு சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியதில் வெளிநாட்டு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், தொண்டூழியர்கள் எனப் பல தரப்பினரின் கூட்டுமுயற்சி அடங்கியுள்ளது.

தண்டவாளங்களில் சேதமுற்ற பகுதிகளைச் சரிசெய்ய பத்திரி வேலைகளில் ஈடுபட்டோரும் அவர்களில் அடங்குவர்.

கட்டுமான மேலாளரான 36 வயது தண்டபாணி விக்னேஷ் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பணிமனைப் புதுப்பிப்புப் பணிகளுக்கான ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவரும் அவரது குழுவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் 20 பேரும் செப்டம்பர் 26ஆம் தேதி கிழக்கு - மேற்குத் தடத்தில் சேதமடைந்த தண்டவாளப் பகுதிகளைப் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நான்கு நாள்களுக்கு அன்றாடம் 9 முதல் 10 மணி நேரம் பணியாற்றி புதிய தண்டவாளப் பகுதிகளை தற்போதுள்ளவற்றுடன் இணைக்கும் பத்திரி வேலைகளை இக்குழுவினர் முடித்தனர்.

அன்றாடம் பிற்பகல் 2.30 மணி முதல் நள்ளிரவு வரைதான் வேலை செய்யமுடியும் என்பதே முக்கியச் சவால் என்கிறார் தண்டபாணி. ஏனெனில், மற்ற நேரங்களில் வெப்பத்தால் தண்டவாளம் விரிவடைந்து, பத்திரிப் பொருள்களை நுழைக்கத் தேவைப்படும் 30 மில்லிமீட்டர் இடைவெளி குறைந்துவிடும்.

ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் பொதுமக்களும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குளிர்ந்த நீரையும் விரைவு உணவு வகைகளையும் வழங்கியதாக அவர் நன்றியுடன் கூறினார்.

இவரது குழுவினரைப்போல் 800க்கும் மேற்பட்ட ஊழியர்களின் கூட்டுமுயற்சியால்தான் கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது சாத்தியமானது.

தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதைத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் வேலைபார்க்கும் கட்டுமான மேலாளர் ஸ்டீவ் ஹால், 63, இவ்வாறு சேவை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் அடங்குவார்.

(இடமிருந்து) நோராஸ்கின் இப்ராகிம், ஸ்டீவ் ஹால், லிம் எங் கெக்.
(இடமிருந்து) நோராஸ்கின் இப்ராகிம், ஸ்டீவ் ஹால், லிம் எங் கெக். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அறிமுகமற்ற ஊழியர்களை ஒருங்கிணைத்து வேலையில் ஈடுபடுத்துவது சவாலாக இருந்தபோதும் தேடிவந்து உணவு வகைகளைத் தந்த பொதுமக்களின் அன்பை இவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

பொதுப் போக்குவரத்து நிறுவனங்களையும் ஆணையத்தையும் சேர்ந்த ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், தொண்டூழியர்கள் என 620 பேர் ரயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆகாயப்படையின் ஓய்வுபெற்ற பொறியாளர் லிம் எங் கெக், 62, ஆணையத்தின் பேருந்து உரிமப் பிரிவைச் சேர்ந்த முதன்மை நிர்வாகி நோராஸ்கின் இப்ராகிம் போன்றோரும் தொண்டூழியர்களில் அடங்குவர்.

தேசிய சேவை தகுதிகாண் பருவக் காவல் ஆய்வாளர் நீலராஜன் பிரையன் மேத்யூவும் தொண்டூழியர்களில் அடங்குவார். முழுநேர தேசியச் சேவையாளரான இவர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் தாமாக முன்வந்து ஈடுபட்டார்.

ஆய்வாளர் நீலராஜன் பிரையன் மேத்யூ, 20.
ஆய்வாளர் நீலராஜன் பிரையன் மேத்யூ, 20. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 வயதாகும் இவர், திடீரென்று ரயில் சேவை தடைபட்டதை அடுத்து பயணிகள் பலரும் வழிகேட்டுத் தன்னை அணுகியதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்