சிங்கப்பூரில் மார்ச் மாதம் வறட்சியான மாதங்களில் ஒன்றாக இருப்பதே வழக்கம். ஆனால் 2025 மார்ச் மாதம் விதிவிலக்காக, மழைப்பொழிவு மிகுந்த மாதமாகப் பதிவாகி உள்ளது.
அதற்கு, வழக்கத்திற்கு மாறான பருவமழை 2025 மார்ச் 19, 20 தேதிகளில் பெய்தது முக்கியக் காரணம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வியாழக்கிழமை (ஜனவரி 8) தனது ஆண்டறிக்கையில் தெரிவித்தது. அந்த இரு நாள்களில் மட்டும் சிங்கப்பூர் முழுவதும் சராசரியாக 272.3 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அது குறிப்பிட்டது.
அது, ஒரு மாதத்தின் நீண்டகால சராசரி அளவான 209.7 மில்லிமீட்டரைக் காட்டிலும் அதிகம். 2025 மார்ச் மாதத்தில் வழக்கத்தைக் காட்டிலும் 130 விழுக்காடு அதிகமாக 482.9 மில்லிமீட்டர் மழை பெய்ததாகவும் ஆய்வகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவமழை அதிகமாகப் பொழிந்ததன் காரணமாக 2025ஆம் ஆண்டு ஒரு விதிவிலக்காக குளிர்ச்சியுடன் தொடங்கியது.
அதனால், 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு மழைப்பொழிவுமிக்க ஆண்டுகளின் பட்டியலில் 2025ஆம் ஆண்டு ஏழாவதாக இடம்பெற்றுள்ளது என சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.
மத்திய ஆசியா போன்ற குளிர்ப் பிரதேசங்களில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று தென்சீனக் கடலின் வெதுவெதுப்பான நீரைக் கடக்கும்போது ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. அதன் காரணமாகப் பருவமழையில் எதிர்பாராத ஏற்ற இறக்கம் நிகழ்கிறது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டுமல்லாது, ஜனவரி மாதத்திலும் 10 மற்றும் 13ஆம் தேதிகளில் பெய்த மழை சாதனை அளவாகப் பதிவானது.
அந்த மாதத்தின் அன்றாட அதிகபட்ச மழை ஜனவரி 10ஆம் தேதி புலாவ் தெக்கோங்கில் பெய்தது. அன்று ஒருநாளில் அங்கு 241.8 மில்லிமீட்டர் மழை பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் 2011 ஜனவரி 30ஆம் தேதி பெய்த 238.2 மில்லிமீட்டர் என்னும் சாதனையை அது முறியடித்தது.

