தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனநாயகக் கடமையை ஆற்ற மழை ஒரு பொருட்டன்று

2 mins read
aaefd7ea-e1a7-4f55-a198-ea5c584a08da
புளோக் 608 கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 1 கீழ்த்தளத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

வாக்களிப்பு நாளான சனிக்கிழமை (மே 3) காலை தீவின் பல பகுதிகளிலும் பெய்த கனமழையைப் பொருட்படுத்தாமல் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தொடங்கினர்.

வாக்களிப்பு நிலையங்கள் காலை 8 மணிக்கு திறப்பதற்கு முன்பே மக்கள் வரிசை பிடித்து நிற்கத் தொடங்கினர்.

தீவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தபோதிலும் உட்லண்ட்சில் அதற்கான அறிகுறி தென்படவில்லை. புளோக் 168 உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 11ன் கீழ்த்தளத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் காலை 8.05 மணிக்கு குறைந்தது 50 பேர் வரிசையில் நின்றனர்.

பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் மக்கள் செயல் கட்சி அணி போட்டியிடும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் உட்லண்ட்ஸ் அமைகிறது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் அந்த அணி பொருதுகிறது.

பொங்கோலில் வழக்கறிஞர் ரஃபையல் லூயிசும் அவரின் மனைவி அய்ரின் லம்மும் புளோக் 264 வாக்களிப்பு நிலையத்தில் முதல் வாக்காளர்களாக வாக்களித்தனர்.

நீண்ட வரிசையைத் தவிர்க்க காலை 6.15 மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்ட அவர்கள், “இதுவரை இல்லாத உற்சாகமான தேர்தல் இதுவே,” எனக் கருத்துரைத்தனர்.

முற்பகல் வேளைக்குள் வானம் தெளிந்துவிட்டது. வாக்களிப்பு நடைமுறை சுமுகமாக இருந்ததாக பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய மனைவியும் நண்பகல் வாக்கில் கல்வி அமைச்சு (இவான்ஸ்) விளையாட்டு மண்டபத்திற்கு வாக்களிக்கச் சென்றனர். தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான வாக்களிப்பு நிலையமாக அது விளங்குகிறது.

அதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அவருடைய மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் கிரசெண்ட் பெண்கள் பள்ளிக்கு வாக்களிக்கச் சென்றனர். அதுவும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான வாக்களிப்பு நிலையமாகத் திகழ்கிறது.

சனிக்கிழமை (மே 3) நண்பகல் வாக்கில், தீவு முழுவதும் உள்ள 1,240 வாக்களிப்பு நிலையங்களில் 1,261,449 சிங்கப்பூரர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் துறை தெரிவித்தது.

போட்டியிடப்படும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதிபெறும் 2,627,026 பேரில் இது ஏறக்குறைய 48 விழுக்காடு.

2015க்குப் பிறகு முதன்முறையாக இவ்வாண்டு நேரடிப் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020 தேர்தலின்போது நேரடிப் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்