அடுத்த இரு வாரங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வானிலைச் சேவை முன்னுரைத்துள்ளது.
பிற்பகல் நேரங்களில் மிதமான அளவிலிருந்து கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாள்களில் வெப்பநிலை ஏறத்தாழ 23 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகக்கூடும் என்று நம்பப்படுகிறது.
வடகிழக்கு பருவமழைக்காலம் காரணமாக சிங்கப்பூரில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒருசில நாள்களில் பிற்பகலில் பெய்யும் மழை காலை நேரத்திலும் தொடரும் என்று வானிலை மையம் கூறியது.
வட திசையிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும் என்று வானிலைச் சேவை தெரிவித்தது.
பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24லிருந்து 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திலும் மார்ச் மாதம் முதல் பகுதியிலும் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


