சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
நாட்டைச் சுற்றி உள்ள வட்டாரங்கள் உட்பட வடமேற்கு, வடகிழக்குத் திசைகளில் இருந்து காற்று வீசும் எனவும் இந்நிலை மாத இறுதிவரை தொடரும் என்றும் ஆய்வகம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தின் அடுத்த இரண்டு வாரம், தீவின் பல இடங்களில் சராசரி அளவைவிட மழை குறைவாகவே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தின் முதல் ஓரிரு நாள்களில், மிதமான, அல்லது இடியுடன் கனமழை மதிய நேரத்திலும் மாலை வேளைகளிலும் தீவின் பல பகுதிகளில் பெய்யும் என்று ஆய்வக அறிக்கை கணித்துள்ளது.
அதன்பிறகு வரும் நாள்களில் வானிலை வழக்கமாகவும் அவ்வப்போது காற்று வீசியபடி இருந்தாலும் சிறிய அளவில் இடியுடன் இடையிடையே மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தில் இனி வரப்போகும் பெரும்பான்மையான நாள்களில் அன்றாட வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நேரங்களில் 34 டிகிரி செல்சியத்தையும் எட்ட வாய்ப்புள்ளது எனவும் ஆய்வகம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

