ரயீசா அழுத்தத்தால் சிதையக்கூடியவர்: லோ பெய் யிங்

ரயீசா அழுத்தத்தால் சிதையக்கூடியவர்: லோ பெய் யிங்

3 mins read
01a7a942-3c2d-4738-aab7-89a9e370e861
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான லோ பெய் யிங், ரயீசா கானின் உதவியாளராகவும் பணியாற்றியிருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பலவீனமானவர் அல்ல என்றாலும் அவர் நெருக்குதலுக்கு ஆளானால் சிதையக்கூடியவர் என அவரது முன்னாள் உதவியாளர் லோ பெய் யிங் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றப் பொய்யுரைகளின் தொடர்பில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீதான வழக்கின் ஐந்தாம் நாளில் திருவாட்டி லோ, இரண்டாவது நாளாக விசாரித்த தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோயிடம் அவ்வாறு கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியின்போது ஒழுங்குமுறைக் குழுவினரைச் சந்தித்தபோது திருவாட்டி கானைப் பற்றி “வெகுளி, முட்டாள்” எனத் திருவாட்டி லோ, அந்தக் குழுவிடம் கூறினாரா என்று அவர் கேட்டார்.

திருவாட்டி கானை வெகுளி என வர்ணித்ததை நினைவுகூர்ந்த திருவாட்டி லோ, அவரை முட்டாள் என்றும் கூறிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார்.

பிறகு, அவரைச் சுயநலவாதி என்று அழைத்தாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, திருவாட்டி லோ, “ஆம், சில நேரங்களில்,” என்று பதிலளித்தார்.

பலவீனமானவர்களையும் குறைகூறல்களால் இடிந்துபோகிறவர்களையும் குறிக்கும் ‘லாவ் ஹோங்’ என்ற ஹாக்கியன் மொழித் தொடரால் திருவாட்டி கானை வர்ணித்தாரா என்றும் திருவாட்டி லோ கேட்கப்பட்டார்.

மொறுமொறுத்தன்மை இழந்த, காற்றில் நமுத்துப்போன பழைய பிஸ்கெட்டுகளை ‘லாவ் ஹோங்’ என சீனர்கள் அவ்வாறு வர்ணிப்பதுண்டு.

“பலவீனம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால், (திருவாட்டி கான்) குறைகூறல்களால் பாதிப்படையக்கூடியவர் என்பதால் அவரை அவ்வாறு வர்ணித்தேன்,” என்றார் திருவாட்டி லோ.

அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போதுதான் திருவாட்டி கானின் பொய் குறித்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசியதாகத் திருவாட்டி லோ நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

“நான் முன்பு கூறியது போல, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று பிரித்தம் சிங்கைச் சந்தித்தேன். எங்களுக்கு இடையில் புரிதல் நிலவியது. ஆனால் நான் இது பற்றி நேரடியாகக் கேட்டது அக்டோபர் 12ஆம் தேதியின்போதுதான்,” என்றார் திருவாட்டி லோ.

“அப்படியென்றால் இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்காது என்பதைப் பிரித்தம் சொல்லவில்லை,” என்று கேட்ட திரு ஜுமபோயிடம், “ஆனால் நான் அப்படித்தான் புரிந்துகொண்டேன்,” என திருவாட்டி லோ முதலில் சொன்னார்.

கேள்வியைத் திரு ஜுமபோய் மீண்டும் கேட்ட பிறகு, “இல்லை, அவர் என்னிடம் அப்படி வாய்விட்டுச் சொல்லவில்லை,” என்றார் திருவாட்டி லோ.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் விசாரணை தொடங்கியதற்கு முந்திய நாளான டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவாட்டி லோவுடன் நடந்த சந்திப்பு குறித்தும் தற்காப்பு வழக்கறிஞர் கேட்டிருந்தார்.

பொய்யைப் பற்றி திரு சிங், 2021 அக்டோபரில்தான் தெரிந்துகொண்டதாக திருவாட்டி கான் குழுவிடம் கூற விரும்பினாரா எனத் தற்காப்பு வழக்கறிஞர் திருவாட்டி லோவிடம் கேட்டார்.

“உமக்குப் பைத்தியம் (crazy) என்று நான் (திருவாட்டி கானிடம்) கூறினேன்,” என்று திருவாட்டி லோ பதிலளித்தார்.

“ஆனால், நீங்கள் கூறியதற்கு அது முரணாக இருக்குமே,” என்றார் திரு ஜுமபோய்.

“ஆம், ஏனெனில் உண்மையை நான் கூற இருந்தேன்,” என்று திருவாட்டி லோ பதிலளித்தார்.

முன்னதாக, பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றைக் காவல்துறை ஒழுங்காகக் கையாளவில்லை என்று திருவாட்டி கான் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 25 வயதுப் பெண் ஒருவர் அதுகுறித்துப் புகார் செய்ய காவல்நிலையத்துக்குச் சென்றபோது தாமும் அவருடன் சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய அதிகாரி அவர் அணிந்திருந்த ஆடைகள் பற்றி முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் மதுபானம் அருந்தியிருந்ததைச் சுட்டிக்காட்டியதாகவும் திருவாட்டி கான் கூறினார்.

ஆனால், இதுகுறித்து தாம் பொய் சொன்னதாக அதே ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்