சமூக வணிகர்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ரெய்ஸ் நிறுவனம்

2 mins read
ccea3e3b-57fe-4e48-8f60-d611d0fa5d28
சுவிட்ச் 2025 என்ற நிகழ்ச்சியில் ரெய்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களில் சிலர். - படம்: ரெய்ஸ் சிங்கப்பூர்

கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் சமூக வணிகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது சிங்கப்பூர் சமூகநோக்கு வணிகங்களுக்கான நிலையம் (ரெய்ஸ் சிங்கப்பூர்).

2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 300 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ரெய்ஸ் நிறுவனம், இன்று அவ்வெண்ணிக்கையை 1,000க்கும் அதிகமாக உயர்த்தி சமூக மாற்றத்தின் வலுவான தளமாக மாறியுள்ளது.

சமூக நோக்குடன் தொழில் தொடங்க முற்படுபவர்களுக்கும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் சமூக வணிகர்களுக்கும் வழிகாட்டும் அமைப்பாக ரெய்ஸ் செயல்பட்டு வருகிறது.

உறுப்பினர் அங்கீகாரம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மற்ற தொழில் நிறுவனங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்கி, சமூக வணிகர்களுக்கு அந்நிறுவனம் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

ரெய்ஸ் அமைப்பின் சிறப்புமிக்க சமுதாயப் பயன் கட்டமைப்பு, மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கமே முதன்மை நோக்கமாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை முதல் அம்சமான ‘நோக்கம்’ வலியுறுத்துகிறது.

‘கூடுதல் செயல்பாடுகள்’ என்ற இரண்டாவது அம்சமானது, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், வருவாய் ஈட்டுவதையும் முதன்மைப்படுத்தி, இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையைக் கண்டறியும் கட்டமைப்பு இருப்பதை வலியுறுத்துகிறது.

வளங்களைச் சரியான முறையில் வகுத்து அதற்கேற்றவாறு மாற்றத்தை உருவாக்குவது முக்கியம் என்று வலியுறுத்துகிறது மூன்றாவது அம்சமான ‘விகிதாசாரம்’ (Proportionality).

இக்கட்டமைப்பின் மூலம் சமூக நிறுவனங்களின் தாக்கத்தை அளவிட்டு, வாடிக்கையாளர்களும் பங்குதாரர்களும் அந்நிறுவனங்களுடன் நம்பிக்கையோடு இணைந்து செயல்பட இயல்கிறது.

ரெய்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களில் 16 விழுக்காட்டினர் $1 மில்லியனுக்கும் மேலாக வருவாய் ஈட்டுகின்றனர்.

“நல்ல சிந்தனைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக ரெய்ஸ் நிறுவனம் பல கட்டமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது,” என்றார் அதன் உத்திபூர்வத் திட்டங்கள் பிரிவின் இயக்குநர் கோ வெய் ஷான்.

கடந்த பத்து ஆண்டுகளில் ரெய்ஸ் நிறுவனத்தின் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இவ்வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் 2026 ஜனவரி 8ஆம் தேதி ரெய்ஸ் நிறுவனம் தனது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட சமூக வணிகங்கள், நிறுவனப் பிரதிநிதிகள், அரசியல் சார்புடையோர் பங்கேற்கவிருக்கும் இவ்விழாவில், அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்