ஊழியர்கள் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப சம்பளத்தை உயர்த்துங்கள்: மலேசிய அமைச்சர்

2 mins read
97f097fe-1731-4a3a-82c0-d2fd628340ea
மலேசியர்கள் பலர் வேலை பார்க்க சிங்கப்பூருக்கு வருவதுண்டு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியர்கள் பலர், நல்ல வேலைக்காக சிங்கப்பூருக்கு இடம் மாறிக்கொள்வது பலகாலமாக இருந்துவரும் போக்கு.

அந்த வகையில், 1.86 மில்லியன் மலேசியர்கள் வெளிநாடுகளுக்கு இடம் மாறியிருப்பதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் சென்ற ஆண்டு தெரிவித்தார். அவர்களில் 1.13 மில்லியன் பேர் சிங்கப்பூரில் வாழ முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த எண்ணிக்கை, மலேசியாவின் மக்கள்தொகையில் 5.6 விழுக்காடாகும்.

இதுகுறித்து வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) பேசிய மலேசியாவின் முதலீடு, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லியூ சின் டோங், “வெளிநாடுகளைச் சேர்ந்தோரை வேலைக்கு எடுப்பதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் நமது உள்ளூர் ஊழியர்களை எப்படி இங்கேயே இருக்கச் செய்யலாம்? மலேசியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை, சம்பளம்தான் பிரச்சினை,” என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தாங்கள் ஈட்டும் சம்பளத்தில் மூன்றில் இரு பங்கையாவது மலேசியாவில் பெற்றால் தாங்கள் நாடு திரும்பத் தயார் என்று சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசிய ஊழியர்கள் சிலர் நியூ பேப்பரிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவான 57 வயது மி‌ஷெல் சியோங், நாடு திரும்புவதற்கு அந்தச் சம்பளம் தேவைக்கும் அதிகமானது எனக் கூறினார்.

“மலேசியா எனது வீடு. எனது குடும்பத்தாரும் உறவினர்களும் அங்கு இருக்கின்றனர். அங்கு கட்டுப்படியான விலையில் வீடு வாங்கலாம், கூடுதல் நிலம் உள்ளது, காற்றின் தரம் மேலும் சிறப்பாக இருக்கிறது,” என்றார் பேராக் மாநிலவாசியான மி‌ஷெல் சியோங். அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் நிர்வாகத் துறையில் (administrative sector) பணியாற்றி வருகிறார்.

அதேபோல் சூஸியானா இஸ்மாயில் எனும் 33 வயது மாது, சிங்கப்பூரில் தான் ஈட்டும் சம்பளத்தில் முன்றில் இரு பங்கு மலேசியாவில் வழங்கப்பட்டால் வெகு விரைவில் நாடு திரும்பத் தயார் என்று தெரிவித்தார்.

கேகேர் (KCare) பாலர் கல்விச் சேவை துணை ஆசிரியராகப் பணியாற்ற 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்த ஜோகூரைச் சேர்ந்த அவர், “அப்படியிருந்தால் நான் சுங்கத்துறைகள்வழி சாலைப் போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டபடி தினமும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்காது,” என்றார்.

அதேவேளை, ஜோகூரைச் சேர்ந்த குமுதமாகால் உதயகுமார், சிங்கப்பூரைத் தனது இரண்டாவது வீடு எனச் சொல்லிப் பெருமைகொள்கிறார். 2017ஆம் ஆண்டு இங்கு வந்த அவர், மழலையர் கல்வி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

“நான் நாடு திரும்புவது சந்தேகமே. தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரில்தான் ஆகச் சிறந்த கல்வி முறை இருப்பது அதற்குக் காரணம். இந்தக் காலத்தில் கல்வி, கல்வித் தகுதி ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பது நமக்கும் தெரியும்,” என்று 30 வயதாகும் அவர் சொன்னால்ர.

குறிப்புச் சொற்கள்