சூரிய மின்சக்திப் பயன்பாட்டு இலக்கை உயர்த்துவதில் பொருளியல், புவிசார் அரசியல் அம்சங்கள் உள்ளன: எரிசக்தி நிபுணர்

சூரிய மின்சக்திப் பயன்பாட்டு இலக்கை உயர்த்துவதில் பொருளியல், புவிசார் அரசியல் அம்சங்கள் உள்ளன: எரிசக்தி நிபுணர்

2 mins read
b4bdc72a-4c60-4231-a5be-9f43c4910306
சூரிய மின்சக்தி, தற்போது உள்நாட்டில் பயன்படுத்தக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பிரதான மூலமாகும். - படம்: செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்

குடியரசின் சூரிய மின்சக்திப் பயன்பாட்டு இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 2 கிகாவாட்-பீக்கிலிருந்து 3 கிகாவாட்-பீக்கிற்கு உயர்த்துவதற்கான திட்டம், சிங்கப்பூரின் சூரிய மின்சக்தித் துறையின் முதிர்ச்சியைப் பிரதிபலிப்பதாக எரிசக்தி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதோடு, எரிசக்தி இறக்குமதித் தடைகளின் தொடர்பில் நாட்டின் மீள்திறனை அது அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்குச் சூரிய மின்சக்திப் பயன்பாட்டை அதிகப்படுத்துவது, நாட்டின் மின்சாரத் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், அதில் பொருளாதார, புவிசார் அரசியல் அம்சங்களும் அடங்கியுள்ளதாக சிங்கப்பூர்ச் சூரிய மின்சக்தி எரிசக்தி ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகி தாமஸ் ரீண்டல் கூறினார்.

பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில், பிரதமர் லாரன்ஸ் வோங் முதன்முதலில் அது குறித்து அறிவித்தார். சிங்கப்பூர் அதன் சூரிய மின்சக்திப் பயன்பாட்டு இலக்கை அதிகரிப்பதற்கான முக்கியத்துவத்தைப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், டாக்டர் ரீண்டல் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

முன்னதாக, 2030ஆம் ஆண்டுக்குள் 2 கிகாவாட்-பீக் சூரிய மின்சக்திப் பயன்பாட்டை எட்ட இலக்கு இருந்தது. அது 2025ஆம் ஆண்டில் எட்டப்பட்டது.

மூன்று கிகாவாட்-பீக் எனும் புதிய இலக்கு, 2030ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மின்சாரத் தேவைகளில் 4 விழுக்காட்டைப் பூர்த்திசெய்யக்கூடும்.

2050ஆம் ஆண்டுக்குள், சிங்கப்பூரின் சூரிய மின்சக்திப் பயன்பாடு 8.6 கிகாவாட்-பீக்கை எட்டக்கூடும் என்று 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர்ச் சூரிய மின்சக்தி எரிசக்தி ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதைக்கு முன்னுரைக்கப்பட்ட தேவைகளில் பத்து விழுக்காட்டை அது பூர்த்திசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

தனது எரிசக்தித் தேவைகளைப் பாதுகாப்பான, கட்டுப்படியான, பருவநிலைக்குத் தகுந்த முறையில் பூர்த்திசெய்ய, ஹைட்ரஜன், புவிவெப்ப எரிசக்தி போன்ற, குறைந்த கரியமில வாயுவை வெளியேற்றும் மற்ற எரிசக்தித் தெரிவுகளையும் சிங்கப்பூர் ஆராய்கிறது.

குறிப்புச் சொற்கள்