சிங்கப்பூர் 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில் மீண்டுமொரு திருப்புமுனையைச் சந்தித்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
“நிச்சயமற்ற ஆபத்தான உலகச் சூழலை நாடு எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரிகளால் உலகப் பொருளியல் கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வணிகம், தொழில்நுட்பம், ராணுவ விவகாரங்கள், அரசியல் எனப் பலவற்றில் பதற்றம் நிலவுகிறது. இடையில் உலக நாடுகள் சிக்கிக்கொண்டு இரு தரப்பிடமிருந்தும் நெருக்குதலை எதிர்கொள்கிறது,” என்று திரு வோங் சொன்னார்.
“இத்தகைய நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூரின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூரர்கள் கவலைப்படுகின்றனர். வேலைகளுக்குச் சிக்கல் ஏற்பட்டு வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உட்படுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். சிங்கப்பூரர்களின் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று பிரதமர் கூறினார்.
நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று ஊழியர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்க அரசாங்கம் இயன்ற அளவுக்கு உதவுகிறது. வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விரிவான உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சிடிசி (CDC), எஸ்ஜி60 (SG60) பற்றுச்சீட்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டதைத் திரு வோங் சுட்டினார்.
நான்கு பெரியவர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இவ்வாண்டு $3,000க்கும் மேல் பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் கிடைத்திருக்கும். சிங்கப்பூரர்கள் செலவைச் சமாளிக்க இவை ஓரளவுக்கு உதவியிருக்கும் என்று அவர் சொன்னார்.
அண்மையில் ஒரு தம்பதி, டுரியான் பழங்களை வாங்க ஒரே தவணையில் $800 செலவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. டுரியான் பழங்களை ஏராளமானோர் விரும்பி உட்கொள்வது தமக்குத் தெரியும் என்று சொன்ன திரு வோங், அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குச் சில பற்றுச்சீட்டுகளைச் சேமித்துவைப்பது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
பற்றுச்சீட்டுகள் தற்காலிக நடவடிக்கையே தவிர நிரந்தரத் தீர்வன்று என்றார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாட்டின் பொருளியல் உத்திகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
நாடு போட்டித்தன்மையுடன் திகழத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான ‘சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு’ அத்தகைய உத்திகளை ஆராய்கிறது. அண்மையில் அவர் சில நாடுகளுக்குச் சென்று உறவை வலுப்படுத்தப் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் திரு வோங் சொன்னார்.
சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கி, தொடர்ந்து சம்பளத்தைக் கூடச்செய்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் ஒரே இலக்கு என்றார் பிரதமர்.
அனைத்துலக நிலவரத்தைக் கணிப்பது நாளுக்கு நாள் சிரமமாகிவரும் வேளையில் சிங்கப்பூருக்கான புதிய பாதையை வகுக்க உறுதியுடன் செயல்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.
அண்மைப் பொதுத் தேர்தலில் சிங்கப்பூரர்கள் எடுத்த தெளிவான முடிவுக்கு நன்றி தெரிவித்தார் திரு வோங். அவர்களின் வலுவான ஆதரவுடன் சிரமமான பல சவால்களைச் சமாளித்து நாட்டிற்கான பாதையை முன்னெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் மேலும் சிறந்த இல்லத்தை உருவாக்க தாமும் தமது குழுவினரும் பல முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.
வருங்காலச் சவால்களை எதிர்கொள்வதில் ஒவ்வொரு சிங்கப்பூரரின் முயற்சியும் முக்கியம் என்று திரு வோங் வலியுறுத்தினார். எதிர்காலம் சவால்மிக்கதாக இருந்தாலும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேறினால் சிங்கப்பூர்க் கதையின் துடிப்புமிக்க புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்றார் பிரதமர் வோங்.