இரு நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜ் ஜோஷுவா தாமசும் மனநல மருத்துவர் சையது ஹருன் அல்ஹப்ஷியும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தங்களின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னதாக தங்கள் பதவியை விட்டு விலகினர்.
அவர்களின் பதவி விலகல் குறித்து, பிப்ரவரி 14 அன்று, நாடாளுமன்றம் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்தது. அதே நாளில் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து அவர்கள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, வரும் பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாமோ எனும் ஊகங்களை எழுப்பியுள்ளது.
அவர்கள் இருவரும் பிப்ரவரி 14ஆம் தேதி நண்பகல்வாக்கில் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர் என்று நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தெரிவித்தார்.
அரசியலமைப்பின்படி, பதவி விலகிய நேரத்திலிருந்து இரண்டு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களும் காலியாக உள்ளன என்று திரு சியா கூறினார். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது இது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம் அடுத்து பிப்ரவரி 18ஆம் தேதி கூடும்போது, பிரதமர் லாரன்ஸ் வோங் நாட்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து வாசிப்பார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தனது ஃபேஸ்புக் பதிவில் தனது பதவி விலகல் கடிதத்தை இணைத்துள்ள திரு தாமஸ், “சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களுக்கு எனது சிறந்த திறனுக்கு ஏற்றவாறு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்,” என்று கூறியிருந்தார்.
“நான் வேறு விதமாக சேவை செய்ய யோசித்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவது பொருத்தமானதாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டு முறை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புக்கும் மரியாதைக்கும் நன்றி கூறுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
டாக்டர் ஹருனின் கருத்துக்காக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.
இந்த இருவரும் ஜூலை 2023ல் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இது திரு தாமசின் இரண்டாவது தவணையாகும். அவர் முதலில் ஜனவரி 2021ல் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.