நோன்பு மாதத்தை ஒட்டி ஏறத்தாழ 2,500 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்ட பரிசுப் பைகளை வழங்கியது ‘மே பேங்க்’ நிறுவனம்.
‘கிராப்’ நிறுவனம், 12 முஸ்லிம் அமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற இத்திட்டத்தில் 700 பேருக்குப் பரிசுப் பைகளை வழங்கிய நிகழ்ச்சி விஸ்மா கேலாங் செராயில் நடைபெற்றது.
பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
“ரமலான் நெருங்கும் வேளையில் தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வது நன்றியுணர்வு, கனிவு, ஈகை ஆகிய கூறுகளின் பிரதிபலிப்பு. இம்முயற்சிகள் வலுவான சமூகக் கட்டமைப்புகளால் என்ன செய்ய முடியும் என்பதற்குச் சான்று,” என்றார் அவர். மேலும், பல அமைப்புகளின் ஒத்துழைப்பு, உதவிகளைப் பலருக்கு விரைவாகவும் திறம்படவும் கொண்டுசெல்ல உதவியதாக அவர் சொன்னார்.
“ரமலான் என்பது உணவு, பானங்களைத் தவிர்ப்பது மட்டுமன்றி, குடும்பத்தினர், நண்பர்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீது அக்கறை காட்டுவதற்குமான காலமாகும்,” என்று கூறிய அவர், அமைப்புகளின் ஒருங்கிணைப்பும் ஈகை மனப்பான்மையும் ரமலான் மாதம் முழுவதிலும், அதன் பிறகும் தொடரவேண்டும் என விரும்புவதாகச் சொன்னார்.
‘மே பேங்க்’ நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்த ரமலான் உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாண்டு, அமைப்புகளுடன் இணைந்து பேரளவில் இத்திட்டத்தை ‘மே பேங்க்’ முன்னெடுத்துள்ளது. 2,500 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் பல குடும்பங்களுக்கு நிகழ்ச்சியில் உதவி வழங்கப்பட்டதுடன், மீதமுள்ள குடும்பங்களுக்குப் பரிசுப் பைகள் விநியோகிக்கப்பட்டன.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை, ஜாமியா சிங்கப்பூர் (Jamiyah Singapore), முஹம்மதியா (Muhammadiyah) உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்கு ஆதரவளித்தன. தொண்டூழியர்கள் 700 பேர் இதில் பங்காற்றினர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால், “இந்திய முஸ்லிம் அமைப்புகள் இணைந்து 120 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்தோம். தனித்தனி அமைப்புகள் ஆங்காங்கே உதவி வழங்கினாலும், சில குடும்பங்கள் விடுபட வாய்ப்புண்டு. இவ்வகையில் பேரளவில் திரட்டிச் செய்வது, பலருக்கு உதவிகளைச் சென்றடைய வழிவகுக்கிறது. இதில் பங்காற்றியது குறித்துப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்,” என்றார்.
‘கிராப்’ நிறுவன ஓட்டுநர்கள், வர இயலாத குடும்பங்களுக்குக் கொண்டுசேர்க்க உதவியதாக அவர் சொன்னார்.
தமது மனைவி மகனுடன் வசித்துவரும் 71 வயதான சைனுலாப்தீன் பரிசுப் பைகளைப் பெற்றுக்கொண்டார். இந்த உதவி கிடைத்தனால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இது குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும் அவர் சொன்னார்.
துப்புரவுப் பணியில் ஈடுபடும் காமன்வெல்த் குடியிருப்பாளர் நசிமா பீபீ, 65, “பரிசுப் பைகளில் பயனுள்ள பொருள்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர். ரமலான் காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். பண்டிகைக் காலத்தில் இவ்வகை உதவிகள் மனநிறைவை அளிக்கின்றன,” என்றார்.

