சிங்கப்பூரின் மூத்த தூதரக அதிகாரியான பேராசிரியர் டோமி கோ, 2026ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்விருதைப் பெறும் மூவரில் ஒருவர் டோமி கோ.
பிலிப்பீன்சின் ஏழாவது அதிபரின் நினைவாக 1957ல் நிறுவப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது, ஆசிய வட்டாரத்தில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.
“சிங்கப்பூரின் பேராசிரியர் டோமி கோ இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்,” என்று மணிலாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தூதரகம், அனைத்துலகச் சட்டம், பொதுச் சேவை ஆகியவற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த திரு. கோ ஆற்றிய நீண்டகாலச் சேவை அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடற்சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 3வது மாநாட்டின் தலைவராகப் பணியாற்றிய டோமி கோ, 1982ல் கடற்சட்டம் தொடர்பான ஐநா உடன்படிக்கை வெற்றிகரமாக முடிவுக்கு வர முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
மேலும், 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநா பூமி உச்சநிலை மாநாட்டின் பேச்சுவார்த்தைகளுக்கும் 2007ல் ஆசியான் சாசனத்தை வரைந்த உயர்நிலைப் பணிக்குழுவிற்கும் அவர் தலைமைத் தாங்கினார் என்று தூதரகம் குறிப்பிட்டது.
தூதரகப் பணிகளைத் தாண்டி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) தெம்பசு கல்லூரியின் (Tembusu College) நிறுவனத் தலைவராக இருந்தது உட்பட சிங்கப்பூரின் கல்வி மற்றும் பொது விவாதங்களிலும் திரு. கோ பெரும் பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் சிறப்புத் தூதர் பொறுப்பில் இருந்து திரு. கோ விலகும் இந்த வேளையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்தது.
1965ல் விருது பெற்ற முன்னாள் தேசிய வளர்ச்சி அமைச்சர் லிம் கிம் சான், 1972ல் அப்போதைய தற்காப்பு அமைச்சர் கோ கெங் சுவீ, 2017ல் ‘வில்லிங் ஹார்ட்ஸ்’ தொண்டு நிறுவனத்தை நிறுவிய டோனி டே ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் நான்காவது சிங்கப்பூரர் டோமி கோ ஆவார்.
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலர் ரூனா கான், மியன்மார் சமூக ஆர்வலர் போ கியே ஆகியோர் இவ்வாண்டின் இவ்விருதைப் பெறும் இதர இரண்டு பேர்.
வரும் நவம்பர் 15ஆம் தேதி மணிலாவில் உள்ள மெக்ரோபாலிட்டன் திரையரங்கில் விருது, சான்றிதழ், ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என ஏபி செய்தி செய்தி தெரிவிக்கிறது.


