தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அணுசக்தி உற்பத்தி அதிகரிப்பு 2030க்குள் சாத்தியமில்லை: அனைத்துலக எரிசக்தி முகவை

2 mins read
9a54d580-2f3b-49f3-b3e1-35880fea8a49
உலக நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்தில் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்துலகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகவை தலைமை இயக்குநர் ஃபிரான்சிஸ்கோ கமேரா தெரிவித்துள்ளார். - படம்: அனைத்துலகப் புதுப்பித்தக்க எரிசக்தி முகவை

அபு தாபி: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தங்கள் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அதிக நாடுகள் அணுசக்திக்கு மாறுவது குறித்து சிந்திக்கலாம்.

ஆனால், 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைக்கும் அளவுக்கு அதற்குள் அணுசக்தி உற்பத்தியை அதிகரிப்பது சாத்தியமில்லை என்று அனைத்துலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகவையின் தலைமை இயக்குநர் ஃபிரான்சிஸ்கோ கமேரா கூறியுள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு ஜனவரி 16ஆம் தேதி அளித்த நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதற்கு மாறாக, உலக நாடுகள் புதுப்பித்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னார்.

உலக வெப்பமயமாதலை 2030ஆம் ஆண்டுக்குள், தொழில்துறைக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமாயின், கரியமில வாயு வெளியேற்றத்தை 43 விழுக்காடு வரை குறைக்க வேண்டும் என பருவநிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கட்டுக்குள் வைத்திருந்தால் உலகம் பருவநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி ஏற்படும் மோசமான வறட்சி, அனல் காற்று, மழைப் பொழிவு ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

“அணு உலைகளை ஆறு ஆண்டுகளுக்குள் நிறுவ முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான், இந்தக் காலகட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், இருக்கும் கால அவகாசத்துக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே சாத்தியப்படும்,” என்று திரு கமேரா விளக்கினார்.

அபுதாபியில் ஜனவரி 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற நீட்டிப்புத்தன்மை வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு கமேரா, நிகழ்ச்சிக்கு இடையே ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்தார்.

இதன் தொடர்பில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அணு உலைகளை நிறுவ ஆறிலிருந்து பத்தாண்டுகள் தேவைப்பட்டதாக ‘ஐஏஇஏ’ எனப்படும் ஐநாவின் அனைத்துலக அணுசக்தி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

‘சிஓபி28 ( COP28) என்ற ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற நாடுகள், 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மும்மடங்கு அதிகரிக்க ஒப்புக்கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்